நிதிக் குழு, அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு. மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயை, மத்திய அரசும் மாநில அரசுகளும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கும் அதிகாரம் நிதிக் குழுவிடமே உள்ளது. அரசு நிர்வாகிகள், பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் நிதிக் குழு முடிவெடுக்கும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள 15-வது நிதிக் குழு, 2019 அக்டோபருக்குள் தனது பணியைப் பூர்த்திசெய்து அறிக்கையை அளித்துவிட வேண்டும். 2020 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான காலத்துக்கு இக்குழுவின் பரிந்துரைகள்தான் அமலில் இருக்கும்.

Special Correspondent

15வது நிதிக் குழுவின் பரிந்துரையில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விவாதிக்க கேரள அரசு ஏற்பாடு செய்துள்ள தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதில் தமிழக அரசு பங்கேற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுக்கு மத்திய அரசின் நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்க அமைக்கப்பட்டுள்ள 15வது நிதி குழுவின் பரிந்துரைகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இருப்பதால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளனர்.

2011 கணக்கெடுப்பை கருத்தில் கொண்டால் 1971ம் ஆண்டுக்கு மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய தமிழகம், கேரளம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறையும்.

தமிழகத்திற்கு ரூ.50,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிக்க தென் மாநில நிதி அமைச்சர்களுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்க தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு கேரள அமைச்சர் சில வாரங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.

இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பங்கேற்க ஒப்புக்கொண்ட நிலையில் மத்திய அரசின் நெருக்கடிக்கு பயந்து அதிமுகவின் தமிழக அரசு அதை தவிர்க்க முடிவு செய்துள்ளது.

மக்கள் தொகை குறைப்பு திட்டத்தை திறமையாக நிறைவேற்றியதற்காக மத்திய வரி வருவாய் நிதிப் பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் ஆபத்தை உணர்ந்து, பிரதமர், மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதி இருக்கிறேன். ஆகவே, கேரளாவில் நடைபெறும் தென்னிந்திய நிதி அமைச்சர்கள் கூட்டம், அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை முதலமைச்சர் உணர்ந்து, தில்லி எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டவோ, மத்திய அரசு ஏதாவது நினைத்துக் கொள்ளுமோ என அஞ்சியோ இக்கூட்டத்தைப் புறக்கணித்து விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே தமிழ்நாட்டின் நிதி தன்னாட்சி மற்றும் மாநில சுயாட்சிக் கொள்கையைக் கருத்தில் கொண்டு தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்திற்கு ஏற்படும் நிதியிழப்பை ஏனைய தென்மாநிலங்களுடன் இணைந்து, தடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வருவாய்த் துறைச் செயலர் என்.கே.சிங் தலைமையில் மத்திய அரசு அமைத்திருக்கும் 15-வது நிதிக் குழு தன் முன்னே உள்ள சவால்களை எப்படிச் சமாளிக்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

14-வது நிதிக் குழுவின் பரிந்துரையை ஏற்று, வரி வருவாயில் 42%-ஐ மாநிலங்களோடு பகிர்ந்துகொள்வதாகப் பிரதமர் மோடி ஒப்புதல் தந்தார். ஆனால், தற்போது மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டங்களுக்குப் போதிய நிதியாதாரம் இல்லை என்றும் கூடுதலாக நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தச் சிக்கலுக்கு 15-வது நிதிக் குழு எப்படித் தீர்வு காணப்போகிறது என்பது அதன் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால்.

மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய 42% நிதியைக் குறைத்தால், மாநிலங்களுக்கு நிச்சயமாக நிதி நெருக்கடி ஏற்படும். ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்று சொன்னதெல்லாம் வெறும் வாய்வார்த்தைகள் மட்டும்தானா என்ற கேள்வியும் எழும். ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதால் வருவாயை இழக்கும் மாநிலங்களுக்கு, 2022 ஜூன் வரையில் மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்று உறுதியளித்துதான் ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

இவை போக, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொதுச் சரக்கு - சேவை வரி நிர்வாகத்தை விரிவுபடுத்துவது, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது ஆகிய அம்சங்களில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்குவதாகவும் மத்திய அரசு சொல்லியிருக்கிறது.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விலைவாசி கட்டுப்பாடு ஆகிய இலக்குகளும் இருக்கின்றன. எனவே, இவை அனைத்தையும் கணக்கில்கொண்டு, அவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டுக்கான சூத்திரத்தை நிதிக் குழு வகுக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. 15-வது நிதிக் குழுவுக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை...