நாடு முழுவதும் அட்சய திருதியை நாளான புதன்கிழமை தங்கம் விற்பனையில் 25 சதவீதம் அதிகரித்ததாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது.

Special Correspondent

இதுகுறித்து புது தில்லியில் சிஏஐடி அமைப்பின் பொதுச் செயலர் பிரவீண் கண்டேல்வால் புதன்கிழமை கூறியதாவது:
நடப்பு திருமண சீசனில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை நாடு முழுவதும் பெரு நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் கிராமப்புற பகுதிகளிலும் ஏராளமானோர் தங்கம், தங்க ஆபரணங்களை வாங்கினர்.

அட்சய திருதியை விஷேச நாளாக கருதி அவர்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர்.அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி, பிற தினங்களைவிட அட்சய திருதியை நாளான புதன்கிழமை தங்கம் விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கடந்த 2008-இல் இருந்து 2018 வரை தங்கத்தின் விலைகளில் 166 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பான, நம்பகமானது என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பது தெரிய வருகிறது. உலகின் எந்தப் பகுதியிலும் கொடுத்து பணமாக்க முடியும் என்பதால் முதலீட்டு ஈர்ப்புப் பொருளாக தங்கம் திகழ்ந்து வருகிறது.

தங்கம் பங்கு காப்பீட்டு திட்டத்தை வர்த்தகர்கள் மத்தியில் அரசு ஊக்குவிக்க வேண்டும். அதேவேளையில், தங்க உலோகக் கடன் போன்ற திட்டங்களையும் அரசு தீவிரப்படுத்த வேண்டும். தங்கம் வாரியத்தில் சிறு வர்த்தகர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார் பிரவீண் கண்டேல்வால்.

இந்திய நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பங்கஜ் அரோரா கூறுகையில், "நாளொன்றுக்கு தங்கம் விற்பனை ரூ.1,400 கோடியாகும்.

முன்னர், பெருநகரங்களில் மட்டுமே தங்கம் விற்பனை பாராட்டத்தக்க வகையில் இருந்தது. ஆனால், தற்போது, சிறுநகரங்களிலும் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் நகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தூய்மையான தங்கம் குறித்த அரசின் விழிப்புணர்வுப் பிரசாரம் மூலம் தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், "ஹால்மார்க்' முத்திரையிடப்பட்ட தங்கத்தை வாங்குவதற்கு தற்போது பொதுமக்கள் முன்னுரிமை அளித்து வருகின்றனர்' என்றார்.