உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

Special Correspondent

இதன் ஒரு பகுதியாக திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய 9 கட்சிகள் திங்கள்கிழமை (ஏப்.23) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையில் சாலையின் ஓரங்களில் கைகளைக் கோர்த்தவாறு தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் தொண்டர்களும் முழக்கங்களை எழுப்பினர்.

Special Correspondent

புதுக்கோட்டையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திறந்த வேனில் நின்றவாறு மு.க.ஸ்டாலின் மனிதச் சங்கிலியில் பங்கேற்றோரைப் பார்வையிட்டார்.

தஞ்சாவூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுகவின் மூத்த தலைவர் எல்.கணேசன் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ''காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில்தான் உச்சநீதிமன்றம் செயல்படுகிறது'' என்று வைகோ குற்றஞ்சாட்டினார்.

தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே, மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.

மகளிரணி நிர்வாகிகள் தமிழச்சி தங்கபாண்டியன், இந்திரகுமாரி, விஜயா தாயன்பன், சல்மா உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ''காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவும், அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படுவதாக அதிமுகவினர் கூறலாம். இதனால், தமிழகத்துக்குப் பயன் இல்லை. தமிழக மக்களுக்கு எதிராகத்தான் துப்பாக்கி திரும்புகிறது'' என்றார் கனிமொழி.

சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன்: சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்ரமணியன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பாரிமுனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வழக்குரைஞர்களின் மனிதச் சங்கிலி: சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவின் நுழைவாயில் பகுதியில் வழக்குரைஞர்கள் பெருமளவில் மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.

குரோம்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், வர்த்தக அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிவகங்கையில் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையிலும், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையிலும், பெரம்பலூரில் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையிலும், கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையிலும் மனிதச் சங்கலிப் போராட்டம் நடைபெற்றது.