தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Special Correspondent

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகள் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 31.03.2017 அன்று மூடப்பட்டன.

மக்கள் நல அரசாக இருந்திருந்தால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இருந்திருக்க வேண்டும். ஆனால், அரசோ, நகர்ப்புறங்களில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 1,700 மதுக்கடைகளை சட்டவிரோதமாக திறக்கத் துடித்தது. அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தது. எதிராக பா.ம.க.வின் வழக்கில் தான் அரசுக்கு உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க அதிமுக அரசு மேற்கொண்ட அணுகுமுறைகள் முழுக்க முழுக்க மோசடியானவை ஆகும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட்ட உச்சநீதிமன்றம், அந்தத் தீர்ப்பிலிருந்து சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள நகர்ப்புற நெடுஞ்சாலைகளை மட்டும் உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது.

இதைப்பயன்படுத்தி தமிழகத்திலுள்ள நகர்ப்புற நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக்கடைகளை திறக்க தமிழக ஆட்சியாளர்கள் முயன்றனர். அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாலைகளை வகைமாற்றம் செய்து மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி ஆணையிட்டது. அத்தீர்ப்பு இப்போது வரை நீடிப்பதால் தமிழக நெடுஞ்சாலைகளில் புதிய கடைகளை திறக்கவே முடியாது.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் சண்டிகருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதைப்பயன்படுத்திக் கொண்டு நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு துடித்தது.

ஆனால், தமிழகத்தில் சாலைகளை வகை மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் புதிய மதுக்கடைகளை திறக்க முடியாது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மறைத்து விட்டு, தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகளை திறப்பதற்கான சுற்றறிக்கையை கடந்த 01.09.2017 அன்று மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையர் பிறப்பித்தார்.

அதைப் பயன்படுத்தி சுமார் 700 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அவை அனைத்தும் சட்டவிரோதமாக திறக்கப்பட்டவை என்பதை பா.ம.க. ஆதாரங்களுடன் நிரூபித்ததைத் தொடர்ந்தே அந்தக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

மருத்துவமனைகளில் மருத்துவப் பயன்பாட்டுக்காக தவிர பிற தேவைகளுக்காக மதுவை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது மதுக்கடைகளை நடத்துவதே தவறாகும். ஆனால், தமிழக அரசோ மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அனுமதி பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பெயரை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொய்களைக் கூறியது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு ஆளானது.

மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்பதற்காக பொய்கள், மோசடிகள், ஏமாற்று வேலைகள், சட்டவிரோதச் செயல்கள் போன்ற அனைத்தையும் ஓர் அமைப்பு செய்கிறது என்றால், அது நிச்சயம் மக்கள் நல அரசாக இருக்க முடியாது; மாறாக மது வணிகம் செய்யும் நிறுவனமாகத் தான் இருக்க முடியும்.

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் 20.02.2017 அன்று கையெழுத்திட்ட ஆணையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை எட்டும் எண்ணத்துடன், இரண்டாவது கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடப்பாண்டில் மூன்றாவது கட்டமாக 500 கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அரசின் அன்றாடச் செலவுகளுக்குக் கூட மது வருமானத்தை நம்பியிருக்கும் பினாமி அரசு, அது குறித்த அறிவிப்பு எதையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிட வில்லை. ஓர் அரசு அதன் செலவுகளுக்காக மது வருமானத்தை சார்ந்திருப்பது பெரும் அவமானமாகும்.

எனவே, மதுவை நம்பி ஆட்சி நடத்தும் நிலையை ஆட்சியாளர்கள் மாற்ற வேண்டும். நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடும்படியும், புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதித்து புதிதாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது. அத்துடன் மாதம் 500 கடைகள் வீதம் மூடி அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.