அகர்த்தலா நகரில் திரிபுரா கால்நடைக் கவுன்சில் சார்பில் மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் பிப்லப் தேவ் பேசியதாவது :

Special Correspondent

"இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கக் கூடாது. மாறாக சுயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அரசு வேலைக்காக அரசியல் கட்சிகளின் பின்னால் நீண்டகாலமாக இளைஞர்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால், காலமும், நேரமும் அவர்களுக்குத்தான் வீணாகிவிட்டது. அதற்கு பதிலாக இவர்கள் அனைவரும் ஒரு வெற்றிலைப் பாக்கு கடை வைத்து வர்த்தகம் செய்திருந்தால், இந்நேரம் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சம் பணம் இருந்திருக்கும்.

இளைஞர்கள் இன்னும் தாமதிக்காமல், தங்களின் வீடுகளின் பின்னால் ஒரு பசுமாட்டை வளர்க்கலாம். அதில் கிடைக்கும் பாலை விற்பனை செய்தால் லிட்டருக்கு 50 ரூபாய் கிடைக்கும். ஒரு பட்டதாரி இளைஞர் 10 ஆண்டுகளாக ஒரு பசுமாடு வாங்கி வளர்த்திருந்தால், இந்நேரம் அவரிடம் ரூ.10 லட்சம் பணம் அவரின் வங்கிக்கணக்கில் இருந்திருக்கும்.

வேலையில்லாத இளைஞர்கள் வங்கிகளில் ரூ. 75 ஆயிரம் கடன்பெற்று அதன் மூலம் தொழில்தொடங்கி, மாதம் ரூ.25 ஆயிரம் சம்பாதிக்கலாம். இளைஞர்கள் அரசுவேலை வேண்டும் என்று கேட்கிறார்கள். மாற்றுச்சிந்தனை இல்லாத இளைஞர்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. கோழிப்பண்ணை தொடங்கலாம், பன்றிப் பண்ணை தொடங்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்தால் அவர்களின் தரம் குறைந்துவிடும். இதனால்தான் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு சுயமாக தொழில்தொடங்க பல்வேறு வாய்ப்புகளையும், நிதி உதவிகளயும் வழங்கி வருகிறது.

ஆனால், படித்த இளைஞர்களால் பாரம்பரிய விவசாயத் தொழிலுக்கும், அது தொடர்பான துணைத் தொழில்களுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை" இவ்வாறு திரிபுரா முதல்வர் பேசினார்.

திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது 4-வது முறையாகும்.

மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், சாட்டிலைட் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று பேசி பிரமிப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின் ஐஸ்வர்யா ராய், டயானா ஹைடன் அழகை வர்ணித்து, யாருக்கு உலக அழகிப்பட்டம் கொடுத்திருக்கலாம் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், நேற்று சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள்தான் தகுதியானவர்கள், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் சரியாகமாட்டார்கள் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.