மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் விருதுக்கான அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

Special Correspondent

தேசிய அளவில் 27 பேருக்கும், சர்வதேச அளவில் வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டவர் 9 பேருக்கும் ரூ. 5 லட்சம் விருதுத் தொகையுடன் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது. தவிர, இந்திய இளம் அறிஞர்கள் 29 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் விருதுத் தொகையுடன் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் (MBVS) விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருது 1958 முதல் சம்ஸ்கிருதம், அரபி, பாரசீக மொழி அறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 1996 முதல் பாலி/பிராகிருத மொழி அறிஞர்களுக்கும் விருது வழங்கி விரிவு செய்யப்பட்டது. தற்போது செம்மொழித் தகுதி பெற்ற மேலும் நான்கு மொழி அறிஞர்களுக்கு (ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம்) விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இந்த விருது அறிவிப்பில் சேர்க்கப்படவில்லை.

ஏனைய செம்மொழிகள் அனைத்தும் விருதுக்குத் தகுதி பெறும்போது, தமிழ்மொழி மட்டும் ஏன் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

2018-ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருது, மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் (MBVS) விருது ஆகியவற்றுக்குத் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறும், மேலும் தகுதியானவர்களைப் பரிந்துரைக்குமாறும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அண்மையில் சுற்றறிக்கையை (F.N.11-I / 2018- Skt.II dated 23 Feb.2018) அனுப்பி உள்ளது.

அதில், சம்ஸ்கிருதம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி அந்தஸ்து பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 65 விருதுகளை வழங்கத் திட்டமிட்டு, மிகச் சிறந்த பங்களிப்பை நல்கிய அறிஞர்களின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு கல்வி நிறுவனங்களின் தலைமைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 30 ஆகும்.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் மூலமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் விருது அறிவிப்பில் தமிழ் இடம்பெறவில்லை.

மத்திய அரசால் செம்மொழியாக 2004 செப்டம்பரில் தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி, தற்போதைய மத்திய அரசின் விருதில் தவிர்க்கப்பட்டிருப்பது ஏன் என்பது புதிராகவே இருக்கிறது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

தமிழக மக்கள் 1 ரு வரி கட்டி 0.29 மட்டுமே நிதி பெறும் நிலையில் தமிழக அரசும், தமிழ் வளர்ச்சித் துறையும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மொழிக்கும் குடியரசுத் தலைவரின் விருதிலும், மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதிலும் இடமளிக்கப்பட வேண்டமா என்று தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து உள்ளார்கள்.