அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Special Correspondent

இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதில் இந்தியர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் இன்றும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

சொந்த மண்ணில் இருந்தே மக்களை வெளியேற்றும் செயலாகும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மாநிலங்களவையிலும் இவ்விவகாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தீவிரமாக எழுப்பியது.

மேற்கு வங்காளத்தில் இருந்து சென்றவர்களின் பெயரும் நீக்கப்பட்டு உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் இன்றும் இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை தொடர்பாக மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Special Correspondent

இதன் இடையே டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதுகுறித்து நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இன்று பாராளுமன்ற வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு தொடர்பாக மம்தா கூறுகையில், அத்வானியை நீண்ட காலமாக தெரியும், அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே நான் அவரை சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த 833 பேர் அசாம் சிறைகளில் உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“பா.ஜனதா வாக்கு வங்கி அரசியலை மேற்கொள்கிறது. என்ஆர்சி உலகையே பாதிப்புக்கு உள்ளாக்கும். எல்லையை பாதுகாப்பது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இந்தியாவிற்குள் எத்தனை பேர் ஊடுருவுகிறார்கள் என்பதை மத்திய படைகள் பார்க்க வேண்டும்.

ஆனால் இப்போது ஊடுருவல்காரர்கள் என்று மக்களை துன்புறுத்துகிறார்கள்,” என கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.

மேலும், அசாமிற்கு எதிர்க்கட்சிகள் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பா.ஜனதா தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை அசாம் செல்ல கேட்டுக்கொண்டுள்ளேன் எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதனிடையே அசாம் மாநிலத்தில் செய்தது போல் மக்களை பிரித்தாளும் முயற்சியை மேற்கு வங்கத்தில் மத்திய அரசு செய்தால் உள்நாட்டு போர் வெடிக்கும், ரத்த ஆறு பாயும் என மம்தா பேனர்ஜி பேசியதால் அவர் மீது அசாம் மாநிலம் திப்ருகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு செய்திகள் : இராணுவ ஹெலிகாப்டர் சர்ச்சை: ரகசியம் காத்த நிர்மலா போட்டு உடைத்த அதிமுக