ஸ்ரீநகரிலிருந்து 30 கி.மீ., தொலைவில் புல்வாமா மாவட்டம் உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப்., வீரர்களின் பயிற்சி முகாம் செயல்பட்டு வருகிறது.

Special Correspondent

இன்று அதிகாலை 2 மணியளவில் முகாமிற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இந்த தாக்குதலில் 4 வீரர்கள் மரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இதில் முகாமில் ஊடுருவிய 3 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கட்டிடம், மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை முறியடிக்கும் வகையில், பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு நாளை விமரிசையாக கொண்டாடப்படும். இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்ற தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்ற கூடும் என்பதால், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என உளவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது கருப்பு பணம் தீவிரவாதம் எல்லாம் அழிந்து விடும் என்று பிரதமரும் பிஜேபி மந்திரிகளும் கூறிய நிலையில் தொடரும் தீவிரவாத பிரச்சனை அரசுக்கு பெரும் சவாலாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.