2016–ம் ஆண்டு வகுக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை குறித்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

Special Correspondent

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாசிம் குவாத்ரி இதுதொடர்பாக பிரமாண பத்திரம் ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்ய விரும்புவதாக கூறினார்.

அதைக் கேட்ட நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அந்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து நீதிபதிகள் " நீங்கள் (மத்திய அரசு) எதற்காக எங்களை ஈர்க்கப் பார்க்கிறீர்கள். உங்களது செயல்பாட்டில் எங்களுக்கு திருப்தி இல்லை. நீங்கள் எல்லா குப்பைகளையுமே (பிரமாண பத்திரம்) எங்கள் பக்கம் தள்ளிவிடப் பார்க்கிறீர்கள். நீங்கள் தாக்கல் செய்யப்போவதாக கூறும் பிரமாண பத்திரத்தில் எந்த முக்கிய விவரமும் இருக்காது. உங்களிடம் இருக்கும் குப்பைகளையெல்லாம் எங்களிடம் கொட்டப்பார்க்கிறீர்கள். நாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல.

திடக்கழிவு மேலாண்மை பற்றி 2000–ம் ஆண்டு விதி முறைகளை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதை எந்த மாநிலமும், யூனியன் பிரதேசமும் நடைமுறைப்படுத்தவில்லை.

பிறகு 2016–ல் புதிய விதிமுறைகளை அறிவிக்கிறீர்கள். அதிலும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே உள்ள எளிய விதிமுறைகளை மாநிலங்கள் கடைபிடிக்காத நிலையில் இதுபோன்ற கடுமையான விதிமுறைகளை ஏன் வெளியிடுகிறீர்கள்.

இவ்வாறு அவர்கள் கூறிவிட்டு இது தொடர்பாக விளக்கப்படம் ஒன்றை அடுத்த 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை சரிவர நடைமுறைப்படுத்தாததால் தான் நாடு முழுவதும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவி ஏராளமான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டு இருப்பதாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்து இருந்தது நினைவு குறிப்பிடதக்கது