தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வருமானம், தங்களது குடும்ப உறுப்பினர்களின் வருமானம் ஆகியவற்றுடன் அந்த வருமானத்துக்கான ஆதாரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Special Correspondent

ஆரோக்கியமான ஜனநாயகம் தழைப்பதற்கு தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். எனவே, எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் வருவாயைவிட அதிகமாகிறா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

அந்தக் குழு தனது தொடர் கண்காணிப்பின் மூலம், எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்தால், விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது குறித்தும் நாடாளுமன்றம் அல்லது சட்டப் பேரவையில் பரிசீலிக்கப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வருமானம், தங்களது குடும்ப உறுப்பினர்களின் வருமானம் ஆகியவற்றுடன் அந்த வருமானத்துக்கான ஆதாரங்களையும் வேட்புமனுவில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போதைய சட்டப்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தனது வருமானம், தனது கணவர் அல்லது மனைவியின் வருமானம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வருமானம் ஆகியவற்றை வேட்புமனுவில் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், அந்த வருமானத்துக்கான ஆதாரத்தை அவர் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.

இந்நிலையில், லோக் பிரஹாரி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த எஸ்.என்.சுக்லா, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்களின் வருமானம் குறுகிய காலத்திலேயே பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. இவ்வாறு, 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள், 257 எம்எல்ஏக்களின் வருமானம் குறுகிய காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே, வேட்பாளர்களின் வேட்பு மனுவில், அவர்களது வருமானம், குடும்ப உறுப்பினர்களின் வருமானம் ஆகியவற்றைத் தெரிவிப்பது மட்டுமின்றி, அந்த வருமானத்துக்கான ஆதாரத்தைக் குறிப்பிடும் வகையில் ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், குறுகிய காலத்தில் வருமானம் பன்மடங்கு அதிகரித்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் விவரத்தை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மத்திய அரசின் சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடீடி) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், மனுதாரர் குறிப்பிட்ட 257 எம்எல்ஏக்களில் 98 பேரின் வருமானம் குறுகிய காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது; இதேபோல், 26 மக்களவை எம்.பி.க்களில் 7 பேரின் வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது; இதுதவிர, 42 எம்எல்ஏக்களின் வருமானம் தொடர்பாக, வருமான வரித் துறை விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், விசாரணை வரம்புக்குள் இருந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் பெயர்ப் பட்டியலையும் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சிபிடீடி தாக்கல் செய்திருந்தது.

ஆனால், அந்தப் பத்திரத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு எதிரான விசாரணை பற்றிய விவரங்கள் இடம்பெறாததால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி அடைந்தது.

அதனால் மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.