“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க "தினமணி" நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக விளக்கம் அளித்து “யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Special Correspondent

அக்கட்டுரையைப் பிரசுரித்த தினமணி நாளிதழிலும் “ஆசிரியர் வருத்தம்” என்றெல்லாம் போடாமல், “தினமணி வருந்துகிறது” என்று ஒட்டுமொத்தமாக நாளிதழே வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்து மதம் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உடன்பாடு இல்லை. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதத்தில் அனைத்து மதத்தினரும் சாதி வேறுபாடின்றி, “சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை” போன்றநெறிகளை உயர்த்திப் பிடித்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பம்.

ஆனால் “வெறுப்பு அரசியலுக்கு எப்போது விதை தூவலாம்; வெறுப்புக் கனலை விசிறிவிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்" என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் தாங்கள்தான் ஒட்டு மொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் மீதும், அக்கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதும், பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டுவதும் துளியும் நாகரிகமானது அல்ல என்பதோடு மட்டுமல்ல- மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம் தாழ்ந்த வகையிலும் தமிழ் மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார் .

பிஜேபி பொது செயலாளர் பேச்சை காண