மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் முக்கிய சாட்சியாக விளங்கும் செல்போன் ஆடியோவில் பதிவாகியுள்ள குரல் தனது குரல் தான் என நிர்மலாதேவி ஒப்புக் கொண்டுள்ளார்.

Special Correspondent

சென்னையில் நடைபெற்ற குரல்மாதிரி சோதனையின் போது இதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

இவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதாகி சிறையில் உள்ளனர்.

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, குரல் மாதிரி பரிசோதனைக்காக நிர்மலாதேவியை, மதுரை பெண்கள் சிறையில் இருந்து தனி வேனில் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துணை இயக்குநர் முன் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

மாணவிகளிடம் போனில் பேசியதை காகிதத்தில் எழுதி நிர்மலாதேவியிடம் கொடுத்தனர். காகிதத்தில் எழுதியுள்ளதை நிர்மலாதேவி படித்த போது அவரது குரல் பதிவு செய்யப்பட்டது.

வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோவில் உள்ள குரலும், தற்போது சோதனைக்காக பதிவு செய்யப்பட்ட குரலும் நிர்மலாதேவியுடையது தானா என ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் செல்போனில் பதிவான குரல் நிர்மலா தேவி குரல் தான் என தடயஅறிவியல் துறை உறுதி அளித்துள்ளது.

சோதனையில் குரல் உறுதியானதை அடுத்து பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் அளித்துள்ளார்.

செல்போன் ஆடியோவில் பதிவாகியுள்ள குரல் தனது குரல் தான் என நிர்மலாதேவி ஒப்புக் கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை அறிக்கை சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. தடயஅறிவியல் துறை அறிக்கையை விரைவில் சிபிசிஐடி கோர்ட்டில் தாக்கல் செய்கிறது.

தொடர்பு செய்திகள் : உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்