சிலை கடத்தல் சம்பவங்களை இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும், அவற்றைத் தடுக்காவிட்டால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

Special Correspondent

தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் , கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிலை தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், கோயில்களில் உள்ள சிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகளைப் பரிந்துரைத்து அவற்றை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கோயில்களில் உள்ள சிலைகளைப் பாதுகாக்க கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் இதுவரை அமைக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரி ராஜபாளையம் கோயில் அன்னபூரணி சிலை மாயமாகி உள்ளது.

மேலும் நடராஜர் உள்ளிட்ட சிலைகள் பாதுகாப்பற்ற முறையில் விலை குறைவான பூட்டுகளைக் கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ரூ.700 கோடி மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் வயதான மூதாட்டியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்று புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் சிலைகள் மாயமாவது தொடர்பாக எனக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன.

திருவண்ணாமலையில் பஞ்சலோக சிலைகள் திருடு போனதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் சிலைகள் மாயமாவது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.

சிலைக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தால், அதை இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சிலை கடத்தல் புகார்களை விசாரிக்காவிட்டால் அறநிலையத்துறை என்ற தனி அமைப்பு எதற்காக என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிலை கடத்தலை இனியும் தடுக்காவிட்டால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட நேரிடும் என்றார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் ஆஜராகவில்லை. அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மகாராஜன் பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதனையடுத்து வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஜூலை 13 நீதிபதி ஒத்திவைத்தார்.

கோப்பு படம் : கடத்தப்பட்ட சிலைகளுடன் சிலை கடத்திய தினதயாளன்.

தொடர்பு செய்திகள் : சிலை கடத்தல் விவகாரம் அதிமுக பாஜக விஐபிக்கள் தொடர்பா