ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் நிறுவனருமான நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

Special Correspondent

லண்டனில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு திரும்பியதைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் வரும் 25-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நவாஸ் கைதாகியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃபும் (68), அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கிக் குவித்ததாக பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியில் இருந்து அவரை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக நவாஸ் லண்டனில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், லண்டனில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், இஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓர் ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், நவாஸுக்கு ரூ.68 கோடி அபராதமும், மரியத்துக்கு ரூ.17 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், நவாஸ் உள்ளிட்டோர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சரணடையவும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தாய்நாடு திரும்புவதற்கு நவாஸும், மரியமும் முடிவு செய்தனர். அதன்படி, லண்டனில் இருந்து அபுதாபி வழியாக இருவரும் வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில் லாகூர் விமான நிலையத்துக்கு வந்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய உடன், அங்கு தயாராக இருந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவர்கள் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இருவரது கடவுச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், ஷெரீஃபும், மரியமும் சிறப்பு விமானம் மூலம் இஸ்லாமாபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதுதொடர்பான தகவல் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பஷீர் பிறப்பித்தார்.

இஸ்லாமாபாத் அருகே சின்ஹலா பகுதியில் உள்ள ஓய்வு இல்லத்தில் மரியம் அடைக்கப்படவிருப்பதாகவும், இதற்காக அந்த ஓய்வு இல்லம் துணை சிறைச்சாலையாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நவாஸ், ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையச் சேவை முடக்கம்: முன்னதாக, நவாஸ் வருகையையொட்டி லாகூர் நகர் முழுவதும்

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனிடையே, விமான நிலையம் நோக்கி நவாஸின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, காவல்துறையினருக்கும் நவாஸின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூரில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன.

முன்னதாக தனக்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் ராணுவத்தின் தலையீடு இருப்பதாக நவாஸ் ஷெரீஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களுக்கு நவாஸ் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

பாகிஸ்தானை, வலுவான ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும் என நான் விரும்பினேன். எனக்கு எதிரான ஒட்டுமொத்த வழக்கும், அரசியலில் இருந்து என்னை அப்புறப்படுத்த வேண்டும் என்ற முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை. எனக்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் ராணுவம் உள்ளது.பாகிஸ்தானுக்கு திரும்பினால் சிறையில் அடைக்கப்படுவேன் என்பது தெரிந்தும் அங்கு செல்ல முடிவெடுத்தேன். பாகிஸ்தான் தற்போது மோசமான நிலையில் உள்ளது. எனது ஆதரவாளர்கள் எனது பக்கம் நிற்க வேண்டும்; நாட்டின் தலைவிதியை மாற்றி எழுத வேண்டும். நாட்டு மக்களுக்காகவே நான் பாகிஸ்தானுக்கு செல்கிறேன் என்றார் அவர்.

மேலும், தனது ஆதரவாளர்கள் மீதான பஞ்சாப் மாகாண அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், வரும் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின் நம்பகத் தன்மை குறித்தும் கேள்வியெழுப்பினார்.

இதனிடையே, நவாஸின் குற்றச்சாட்டை ராணுவம் மறுத்துள்ளது. நாட்டின் அரசியல் நடைமுறைகளில் தங்களது தலையீடு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் வழக்கு கடந்த வந்த பாதை விவரம் :

2016, ஏப்ரல் 4: பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ், வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்ததாக பனாமா ஆவணத் தகவல்கள் கசிவு.

2016, ஏப்ரல் 5: தன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதி ஆணையத்தை அமைத்தார் நவாஸ்.

2016, ஏப்ரல் 26: நீதி ஆணையத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு.

2016, நவம்பர் 1: நவாஸ் தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு.

2017, ஏப்ரல் 20: நவாஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூட்டு விசாரணை குழு அமைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு.

2017, ஜூன் 13: தங்களது விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக் குழு குற்றச்சாட்டு.

2017, ஜூன் 15: கூட்டு விசாரணை குழு முன் நவாஸ் ஆஜர்.

2017, ஜூலை 5: கூட்டு விசாரணை குழு முன் நவாஸின் மகள் மரியம் ஆஜர்.

2017, ஜூலை 10: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை குழு இறுதி அறிக்கை தாக்கல்.

2017, ஜூலை 28: பிரதமர் பதவியில் இருந்து நவாஸை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

2017, செப்டம்பர் 15: நவாஸின் மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி.

2017, செப்டம்பர் 22: நவாஸின் சொத்துகள் முடக்கம்.

2017, செப்டம்பர் 26: ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நவாஸ் ஆஜர்.

2017, அக்டோபர் 26: நவாஸுக்கு எதிராக கைது வராண்ட் பிறப்பிப்பு.

2018, பிப்ரவரி 21: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நவாஸை தகுதிநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை.

2018, ஏப்ரல் 13: தேர்தலில் போட்டியிட நவாஸுக்கு ஆயுள் தடை.

2018, ஜூலை 6: நவாஸ், மரியத்துக்கு முறையே 10, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

2018, ஜூலை 13: லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய இருவரும் கைது.

தொடர்பு செய்திகள் : உகாண்டாவில் சமூகவலைதளங்கள் வரி விதித்ததற்கு எதிராக போராட்டம்., வன்முறை