திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு கோரையாறு, மரைக்கா கோரையாறு, கிளந்தாங்கி ஆறு, வளவனாறு மற்றும் பாமணியாற்றின் மூலமாக நீர்ஆதாரம் கிடைத்து வருகிறது.

Special Correspondent

இதன் மூலம் சுமார் 13 ஆயிரத்து 323 ஹெக்டேர் விளைநிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குறிப்பாக கோரையாற்றின் வழித்தடம் திருவாரூர் மாவட்டத்தில் நாணலூர் துவங்கி தேவதானம், வீரன்வயல், ஜாம்புவானோடை உள்ளிட்ட பகுதிகளில் நீரை தேக்கி பகிர்ந்தளிக்கும் வகையில் உள்ளது.

இதனால் இந்த பகுதிகளில் பாசன ரெகுலேட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. உப்பூர் மரைக்கா கோரையாறு பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நாணலூர் துவங்கி கடைமடை பகுதி வரை சுமார் 13 கிமீ நீளமுள்ள கோரையாறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது.

இதனால் ஆற்று பகுதியில் ஆகாய தாமரை, காட்டாமணக்கு செடிகள் மண்டியுள்ளதோடு கருவேலமரங்களும் அதிகம் வளர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் படர்ந்து கிடைக்கிறது. அதேபோல் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களும் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் இந்த கழிவு பொருட்கள் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மாசு காரணமாக மீன் வளம் அழியும் அபாயம் உருவாகியுள்ளது.

அத்துடன், கோரையாற்றின் கிளை வாய்க்கால்களும் முட்புதர்கள் மற்றும் மண்திட்டுக்களுடன் உள்ளன. இவற்றில் பெரும்பாலனவை ஆக்கிரமிப்பில் சுருங்கிவிட்டன.

கிளை ஆறுகளான பழம் பாண்டியாறு, புது பாண்டியாறு, தோலி, தேவதானம் வாய்க்கால், கும்மட்டிதிடல், பள்ளியமேடு, வேதநாயகம் செட்டிவாய்ககால், தில்லைவிளாகம் பட்டிமார் வாய்க்கால், வீரன்வயல் முசவெளி, ஐஎன்ஏ வடிவாய்க்கால்களும் தூர்ந்து கிடக்கின்றன. கோரையாறு மற்றும் பகுதி வாய்க்கால்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பயிர்களுக்கு தண்ணீர் சென்றடைவதில் சிரமம் என்பது தொடர்கதையாக உள்ளது.

அதேபோல் பாமணியாறு மற்றும் அதன் வடிகால்களும் இதுபோன்ற நிலையிலேயே உள்ளன. இதனால் கடைமடை விவசாய நிலங்களை உள்ளடக்கிய ராமன்கோட்டகம், புதுகோட்டகம், தப்பதான்வெளி பகுதிகளிலும் சாகுபடி குறைந்துபோனது.

இந்த நிலை தொடர்ந்ததால் இங்குள்ள விளைநிலங்கள் இறால் மற்றும் மீன் பண்ணைகளுக்கான குளங்களாகவும், வீட்டு மனைகளாகவும் மாறிவருகின்றன.

இதனையடுத்து டெல்டா பாசன பகுதியில் உணவு உற்பத்தி ஆண்டுேதாறும் கணிசமாக குறைந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் சாகுபடி பெருமளவில் குறைந்துவிட்டது.

Special Correspondent

கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கும் இந்த நிலை தொடர்கிறது. இதன்படி இப்பகுதிகளில் ஒருபோக சாகுபடியே கேள்விக்குறியாகி உள்ளது. இதில் அதிகாரிகள் முறையாக திட்டமிட்டு ஆறு மற்றும் கிளை வாய்ககால்கள், வடிவாய்ககால்கள் ஆகியவற்றை முன்னதாக தலைப்பிலிருந்தே தூர்வாரியிருக்க வேண்டும்.அதேபோல் பாசன ரெகுலேட்டர்களின் ஷட்டர்களை சீரமைத்திருக்க வேண்டும்.

அத்துடன் மதகுகளை செப்பனிட்டு அதில் பழுதான பலகைகளை மாற்றம் செய்திருக்க வேண்டும். இதுபோல் எந்த பணிகளையும் முறையாக மேற்கொள்ளாமல் ஆண்டுதோறும் பெயரளவிற்கு மட்டுமே குடிமராமத்து பணிகளை செய்வதை பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் துறையினர் செய்து வருகின்றனர்.

ஆறு, வாய்க்கால் தூர்வாருகையில் கரைகளை உயர்த்துவதுடன், கரைகளில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு பராமரிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயங்களை கண்டுகொள்ளவில்லை. அத்துடன்ி அதிகாரிகள் ஆறுகளை தூர்வார தவறிவிட்டனர். இதனால் இன்று முத்துப்பேட்டை ஒன்றியத்தில் செல்லும் அணைத்து ஆறுகளும் தூர்ந்து போன நிலையில் உள்ளது.

தற்பொழுது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பு, கல்லணையில் தண்ணீர் திறப்பு என டெல்டா மாவட்டத்தில் குறிப்பாக இன்னும் சில தினங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதனால் தூர்ந்து கிடக்கும் ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வாரி தரவேண்டும் என்று கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதனை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. கண்டிப்பாக இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டிய பகுதிகளை ஒதுக்கிவிட்டு தேவையில்லாத பகுதிகளில் தூர்வாரும் வேலைகளை செய்து வருகின்றனர்.

இதனால் தற்பொழுது வரும் தண்ணீரை இப்பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அத்துடன் ஆறுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கும் நிலை உருவாகியுள்ளது.

தொடர்பு செய்திகள் : 120 அடியை தாண்டியது மேட்டூர் அணை: காவிரி கரையோர வெள்ள அபாயம்