கோயில்களில் பிராமணர் அல்லாத இதர சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி போராட்டம் நடந்துவந்தது.

Special Correspondent

இந்த போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை 2006ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி பிறப்பித்தார். அதை எதிர்த்த பலர் கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தினரே அர்ச்சகராக இருக்கவேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனிடையே, 2007ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைணவ ஆகம விதிகளின்படியும், திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை மற்றும் பழனி ஆகிய இடங்களில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் சைவ ஆகம விதிகளின்படியும், அர்ச்சகராவதற்கு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு தொடங்கியது. அங்கு 2008 மே மாதத்தில் இருந்து 206 பேர் பயிற்சி முடித்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்கில் ஆகம விதிகளை மீறினால் பணிநீக்கம் செய்யலாம் என்ற சில நிபந்தனைகளுடன் 2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் பிறகும் தமிழக அரசிடம் பயிற்சி பெற்ற 206 பேருக்கு வேலைத் தரப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2018 மார்ச் மாதத்தில் மதுரை தள்ளாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் 206 பேரில் ஒருவரான மாரிச்சாமி என்பவருக்கு அர்ச்சகர் பணியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இது பயிற்சி பெற்ற மற்றவர்களிடையே நம்பிக்கைக் கீற்றை தோற்றுவித்துள்ளது.

Special Correspondent

பிராமணர் அல்லாத ஒருவர் முதல்முறையாக அர்ச்சகராகியிருந்தாலும் இரண்டாண்டு பயிற்சிக்காலத்தில் சிறிதேனும் பிறழ்ந்தாலும் ஆகம விதியை மீறியதாகக் கூறி வேலைவாய்ப்பைப் பறிகொடுக்கும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் கூறுகிறார்.

ஒரு கோவிலில் வேலை கொடுத்தால் மட்டும் போதாது அர்ச்சகர்பணி கிடைக்காமல் உள்ள இதர 205 பேருக்கு இதர கோவில்களில் வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்றும் ஆகம விதி நிபந்தனையை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

பெரியார், அண்ணா வழியையொட்டி சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவைப் பிறப்பித்த கருணாநிதி, தன் கனவு நனவானதை அறியாமல் கடும் உயிர் போராட்டத்தை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்பு செய்திகள் : திமுக தலைவர் கருணாநிதியை இந்திய துணை ஜனாதிபதி நேரில் பார்த்த புகைப்படம் வெளியீடு