ஸ்டெர்லைட் போராட்டத்தின் நூறாவது நாள் போராட்டத்தின்போது, காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வாகனம் உடைப்பு தீ வைப்பு என பல்வேறு தீ எரிப்பு உள்ளிட்ட சம்பவத்தை அடுத்து காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

Special Correspondent

பலர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனை, பாளையங்கோட்டை, மதுரை, உள்பட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல்துறை உயர் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உளவுத்துறை தனிப்பிரிவு காவல் துறையினர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மாவட்டத்தில் உள்ள சில அரசியல் கட்சி விடுதிகளிலும், தனியார் விடுதிகளிலும் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

முதல் நிலை, இரண்டாம் நிலை காவலர்களாக பணியாற்றும் ஆண், பெண் காவலர்கள் ரோட்டிலும் மரத்தடி பகுதியிலும் இரவு பகல் பாராமல் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு பொட்டலம் மூலம் சாப்பாடும் வாட்டர் பாக்கெட்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆண் காவலர்கள் பணியாற்றும் பகுதிகளில் அவசர தேவைகளை பூர்த்தி செய்து விடுகின்றனர். பெண் காவலர்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து வெளியூர் பெண் காவலர் ஒருவர் கூறுகையில், நாங்கள் கடந்த ஒரு வார காலமாக இங்கு சில இடங்களில் தங்கி பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு முறையான உணவு, தங்கும் இடமின்றி சிரமப்படுகிறோம். இன்று தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் எங்களது குழந்தைகளை எப்படி பள்ளிக்கு உறவினர்கள் அனுப்புவார்களோ தெரியவில்லை.எங்களது மன குமுறலை யாரிடம் போய் தெரிவிப்பது? எங்களுக்கு போராடுவதற்கென்று சங்கமும் கிடையாது. அமைப்புகளும் இல்லை. இதை உணர்ந்து உயர் அதிகாரிகள் சுழற்சி முறையில் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தால் சந்தோசமாக பணியாற்றும் நிலை வரும் என்றார்.