கோவை மாவட்டம் நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Special Correspondent

தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா? என்ற தலைப்பில் பாஜக தலைவர் தமிழிசை, செம்மலை, ஞானதேசிகன், செ.கு.தமிழரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக டி.கே.எஸ். இளங்கோவன், எம்எல்ஏ தனியரசு, இயக்குனர் அமீர் ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவிக்கவே பதட்டம் ஏற்பட்டது.

இந்த பிரச்சனையின் போது பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து எஸ்.என்.ஆர் நிர்வாகம் சார்பில் பீளமேடு காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பெயரில் புதிய தலைமுறை நிறுவனம், அதன் கோவை செய்தியாளர் சுரேஷ், இயக்குனர் அமீர் ஆகியோர் மீது 505,153ஏ,3(1) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் கோவையில் இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு காரில் சென்ற எம்எல்ஏ தனியரசின் கார் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் 8 பேர் மீது 506(2),294(B),341,147,148, ஆகிய பிரிவின் கீழ் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.