2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை பரசுராம் வாக்மோரேதான் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பதை சிறப்புப் புலனாய்வுப் படை உறுதி செய்திருந்தது.

Special Correspondent

இந்த நிலையில், சிறப்புப் புலனாய்வுப் படை நடத்திய விசாரணையின் போது, பரசுராம் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது" கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் எனக்கு ஒரு பணி வந்தது. அதில், நமது மதத்தைக் காக்க ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நானும் அதை ஒப்புக் கொண்டேன். ஆனால், நான் கொலை செய்யப் போகும் நபர் யார் என்று எனக்குத் தெரியாது. தற்போது நான் ஒரு பெண்ணை கொலை செய்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரசுராம் வாக்மோர், கொலை திட்டத்தை எப்படி நிறைவேற்றினார் என்பதையும் கூறியுள்ளார். அதன்படி, செப்டம்பர் 3ம் தேதி நான் பெங்களூரு அழைத்து வரப்பட்டு, ஏர்கன் பயன்படுத்துவது குறித்து பெலகாவியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

முதலில் எனக்கு ஒரு வீட்டை அழைத்துச் சென்று காட்டினார்கள். பிறகு 2 மணி நேரம் கழித்து நான் கொலை செய்ய வேண்டிய ஆளைக் காட்டினார்கள். என்னை ஒரே நபர் அழைத்துச் செல்லவில்லை. வேறு வேறு நபர்கள் ஒவ்வொரு இடத்துக்கும் கூட்டிச் சென்றனர்.

செப்டம்பர் 4ம் தேதியான மறுநாள் மாலை அதே வீட்டுக்கு அழைத்து வரப்பட்டேன். அன்றைய தினமே வேலையை முடிக்கும்படி கூறினார்கள். ஆனால் அன்று கௌரி பணி முடித்து முன்கூட்டியே வீட்டுக்கு வந்துவிட்டதால் கொலை செய்ய முடியவில்லை.

Special Correspondent

மறுநாள் மாலை 4 மணியளவில் துப்பாக்கியை என் கையில் ஒப்படைத்தார்கள். நாங்கள் வந்த சமயம் சரியான நேரமாக இருந்தது. அப்போதுதான் பணியில் இருந்து திரும்பிய கௌரி தனது காரை கேட் முன் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். நான் அவரது பின்னால் சென்று இரும்பினேன். அவர் திரும்பி என்னைப் பார்க்கும் போது நான் துப்பாக்கியை இயக்கி அவர் மீது 4 தோட்டாக்களை பாய்ச்சினேன்.

உடனடியாக அறைக்குத் திரும்பி, அன்றைய தினம் இரவே பெங்களூருவில் இருந்து கிளம்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பரசுராமரை அழைத்துச் செல்ல 3 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இன்னும் இந்த சதி திட்டத்தில் மேலும் 3 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்.5-ஆம் தேதி பெங்களூரில் உள்ள இல்லத்தில் மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வுப் படை(சிஐடி), இதுவரை 6 பேரை கைதுசெய்துள்ளது.

கெளரி லங்கேஷை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கைத் துப்பாக்கியைக் கொண்டு, பகுத்தறிவாளர்களான கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கலபுர்கி ஆகியோரையும் கொலை செய்துள்ளதாக சிறப்புப் புலனாய்வுப் படையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், கெளரி லங்கேஷை அண்மையில் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மோரேதான் சுட்டுள்ளார். கெளரி லங்கேஷை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட அதே கைத்துப்பாக்கியைக் கொண்டு கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கலபுர்கி ஆகியோரையும் கொலை செய்திருக்கிறார்கள். இதை தடய அறிவியல் ஆய்வுக்கூடத்தின் ஆய்வறிக்கையும் உறுதி செய்துள்ளது. ஆனால், அந்த கைத் துப்பாக்கியை இன்னும் வசப்படுத்தவில்லை. கைத் துப்பாக்கியைக் கைப்பற்ற இயலாவிட்டாலும், தோட்டாவின் பின்பகுதியில் ஒரே மாதிரியான அடையாளங்கள் பதிந்துள்ளதை வைத்து, ஒரே ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம்.

கெளரி லங்கேஷை கொலை செய்ய உருவாக்கப்பட்ட அமைப்பு 5 மாநிலங்களில் பரவியுள்ளது. இந்த அமைப்பில் குறைந்தது 60 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் தெரியவில்லை.

இந்த அமைப்புக்கு மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த அமைப்புக்கும் உத்தரபிரதேசத்துக்கும் உள்ள தொடர்பை இதுவரை உறுதி செய்யமுடியவில்லை.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து ஜாக்ரிதி சமிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளில் இருந்து உறுப்பினர்களைத் திரட்டி உள்ளது.

சுஜித்குமார் (எ) பிரவீண்தான் இந்த அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளார். பிரவீணை விசாரணை செய்தபோதுதான் இந்த அமைப்பு குறித்த தகவல்கள் தெரியவந்தன. கெளரி லங்கேஷ் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகப்படுகிறோம். அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கெளரி லங்கேஷ் கொலை கவனத்துடன் திட்டமிட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. கெளரி லங்கேஷை வேவு பார்ப்பது, அவரது பலவீனங்கள், கொலை செய்யப்பட்டது வரை 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கன்னட எழுத்தாளரும், பகுத்தறிவாளருமான கே.எஸ். பகவானை கொலை செய்ய தீட்டப்பட்டிருந்த சதியின் கடைசிக் கட்டத்தில்தான் கொலையாளிகளைக் கைது செய்தோம். பகவானைக் கொலை செய்யத் திட்டமிட்ட 4 பேரிடம் நடத்தப்பட்டவிசாரணையில்தான் கெளரி லங்கேஷ் கொலைக்கும் இவர்களுக்கும் இருந்த தொடர்பு உறுதிசெய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டுள்ளோரிடம் இருந்து அண்மையில் கண்டெடுக்கப்பட்ட நாள்குறிப்பில் யார் யாரை கொலை செய்வது என்ற பட்டியல் காணப்பட்டது. அதில் திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னார்டின் பெயர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இருந்தன என்றார் அவர்.

தொடர் செய்திகள் : “பசுமையை" அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா கொதிக்கும் சேலம் பகுதி மக்கள்