சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் விளைநிலங்களை கையகப்படுத்த அளவீட்டு பணிகள் 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

Special Correspondent

முதல் நாளில் இருந்தே இதற்கு கிராம மக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடும் எதிர்ப்பை மீறி 4வது நாளாக நேற்று ராமலிங்கபுரத்தில் அளவீடு பணிகள் தொடங்கியது.

நிலம் எடுப்பு தாசில்தார் அன்பரசி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, கூடுதல் எஸ்பி அன்பு தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Special Correspondent

ராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் அதிகாரிகள் அளவீடு செய்தனர். அப்போது அங்கு வந்த தோட்டத்து உரிமையாளரின் குடும்பத்தினர், மாதக்கணக்கில் உழைத்து, உருவாக்கிய இந்த மரவள்ளி தோட்டம் தான் எங்கள் வாழ்வாதாரம். அது பறிபோகும் போது, உயிரை மாய்ப்பதை தவிர வழியில்லை.

பயிரை காக்க உயிரை இழக்க தயார் என்று கதறினர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம் பகுதிகளில் மரவள்ளி தோட்டத்தில் முட்டுக்கல் நட்டபோது, நிலத்திற்கு சொந்தமான கவிதா மற்றும் அவரது குடும்பத்தினர், ஒருவரையொருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.

Special Correspondent

அனைத்து இடங்களிலும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது நாங்கள் வாக்கப்பட்ட பூமி. தலைமுறைகள் கடந்து எங்களது நல்லது, கெட்டது எல்லாம் இந்த மண்ணில் தான் நடக்கிறது.

Special Correspondent

அதை பசுமை வழிச்சாலை என்ற பெயரில் கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள் என்று பெண்கள் கண்ணீர் விட்டு கதறியது காண்பவர்களை கலங்க வைத்தது. ஆனால், கிராமத்து மக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று 9 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தை அளந்து, முட்டுக்கல்லை அதிகாரிகள் நட்டனர்,

ராமலிங்கபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோயிலும் 8 வழிச்சாலைக்காக அகற்றப்படுகிறது. நேற்று கோயில் முன்பு அதிகாரிகள், அளவீட்டு கல் நட்டனர். அப்போது கோயிலில் பணிவிடை செய்யும் தனம் என்ற பெண், திடீரென அருள்வந்து ஆடினார்.

அப்போது அவர், “என் இடத்தையா நீங்க எடுக்குறீங்க. உங்கள சும்மா விடமாட்டேன். அனுபவிப்பீங்க டா, என்னை அழிச்சா நீங்க அழிஞ்சிடுவீங்கடா’ என் மக்கள் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று ஆவேசமாக கூறினார். அருள்வந்து ஆடிய பின்னர், சிறிது நேரம் கழித்து தனம் நிருபர்களிடம் கூறுகையில், `இந்த கோயிலை எடுப்பதற்கு பதில், என்னை மண்ணோடு மண்ணாக புதைத்து விடுங்கள். இந்த கோயிலில் 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர், இந்த கோயிலுக்கு நிதி கொடுத்துள்ளனர். ஆனால், தற்போது முதல்வரே கோயிலை அகற்ற உத்தரவு போட்டிருப்பது வேதனையாக இருக்கிறது,’ என்றார்.

எனது கணவர் டிரைவராக இருந்தபோது விபத்தில் சிக்கி, வேலைக்கு செல்லமுடியாத நிலையில் இருக்கிறார். எனது பிள்ளைகளுக்கும், எனக்கும் வீடு மட்டுமே இப்போது வாழ்வாதாரம். அரசு உயர்நிலைப்பள்ளி அருகே பிழைப்புக்காக வைத்துள்ள கடையையும் இடிக்கின்றனர். 8 வழிச்சாலையால் ராமலிங்கபுரம் என்ற ஊரே அடியோடு இல்லாமல் போய்விடும் என்கிறார் கண்ணிருடன் அவ்வூரில் வசிக்கும் ஜமுனாராணி

பிரதமர் மோடி 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றார். ஆனால், விவசாயிகளின் நிலத்தை பிடுங்கிக்கொண்டு இருப்பிடத்தை விட்டே துரத்தியடித்து விட்டு எப்படி வருமானத்தை இரட்டிப்பாக்குவார்.

சிமெண்ட் கட்டிடங்களுக்கு இருக்கும் மரியாதை கூட, விவசாயிகளுக்கு இல்லை. பிள்ளை களையும் எப்படி காப்பாற்றுவது என்று தெரியவில்லை. என்கிறார் கவிதா அந்த ஊர் பெண்மணி அழுதபடியே...

தொடர் செய்திகள் : நில அளவிடு 9 பேர் தீக்குளிக்க முயற்சி அதிகாரிகள் ஓட்டம்