‘தேவதாசி’ என்னும் முறை, தமிழகத்தில் கிபி 8ஆம் நூற்றாம் ஆண்டு சோழர் காலம் தொட்டு இருந்து வந்தது.

Special Correspondent

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விட்டு, அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம்.

அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். ‘நித்ய சுமங்கலி’ என்று பெயர் கொடுத்து, அவர்களைப் ‘புனிதப்படுத்தி’ ஏமாற்றினார்கள். உடலை விற்கும் தொழிலை அவர்களின் மீது திணித்து விட்டு, அதற்குச் சடங்குகளின் பெயரால் புனிதப் போர்வை போர்த்தியது சனாதனம் பேசும் சாதி இந்த அவலம் நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.

அந்த தேவதாசி சமூகத்தில் 1883-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம் நால் தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கும் மகளாக இசை வேளாளர் குடும்பத்தில், திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்க்கு அருகில் உள்ள "பாலூர்" என்ற கிராமத்தில் பிறந்தாலும் இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் என்பதால் இவரை மூவலூர் இராமாமிர்தம் என்று அழைத்தனர்...

உறவினர்களும், வேறு சிலரும் ராமாமிர்தத்தின் தாய் தந்தையரிடம், ‘உங்கள் மகளுக்கு இசையும் நாட்டியமும் கற்றுக் கொடுங்கள், பிற்காலத்தில் அவள் அதை வைத்து நிறைய சம்பாதித்துக் கொடுப்பாள்’ என்று தொடர்ந்து வற்புறுத்திய போதும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

இதனால் கோபமுற்ற சமூகம், ராமாமிர்தத்தின் தந்தையை ஒதுக்கி வைத்தது. பொருளாதார ரீதியில் அவரைத் தனிமைப்படுத்தியது. நாளடைவில் அவர்கள் அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இதனால் ராமாமிர்தத்தின் தந்தையான கிருஷ்ணசாமி வாழ்க்கையில் வெறுப்புற்று, மனைவியையும், மகளையும் காப்பாற்ற முடியாமல், குடும்பத்தை விட்டு விலகி எங்கோ காணாமல் போனார்.

நிர்க்கதியாக நடுத்தெருவில் நின்ற தாய் சின்னம்மாள் உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோர் வீட்டுக்கும் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு நடையாய் நடந்தார். யாரும் உதவிக்கு வரவில்லை. ஆதரவற்ற நிலையில், தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, ஒரு தேவதாசியிடம் 10 ரூபாய் பணத்துக்கும், பழைய புடவைக்கும் தன் மகளை விற்றார் சின்னம்மாள். அப்போது சிறுமி ராமாமிர்தத்தின் வயது ஐந்து.

அப்படி விற்க்கப்பட்ட குழந்தைக்கு ஆடல், பாடல் என்று பல கலை கள் கற்றுத் தரப்பட்டது.

Special Correspondent

பருவம் வந்தவுடன் அறுபது வயது பணக்காரக் கிழவனுக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் ராமாமிர்தம். ‘கிழவனை மணக்க மாட்டேன்’ என்று சொல்லி அத்தனை எதிர்ப்புகளையும் எதிர் கொண்டார்.

இந்த சமூகத்தில் பிறந்த ஒரு பெண், அதே சமூகத்து ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் பெண் ‘தேவதாசி’ தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்படும்.

அதே போல ஆண்கள் தன் அக்கா, தங்கைகளுக்கு ‘பார்ப்பு’ வேலை என்று சொல்லக் கூடிய ‘மாமா’ வேலை செய்பவர்களாகவும், அவர்கள் நடனமிட நட்டுவனாராக இருக்கவும் இந்து மதம் அவர்களுக்கு ‘அருளியுள்ளது.'

இதனால் தனக்கு இசையும், நாட்டியமும் பயிற்றுவித்த இளைஞர் சுயம்புப் பிள்ளையை மணப்பேன் என்று சத்தியம் செய்து அதனை நடத்தியும், காட்டினார்.

விடுவார்களா மனு தர்மம் போற்றிய சனாதனவாதிகள், ராமாமிர்தம் _ சுயம்புப் பிள்ளையின் திருமண வாழ்க்கையைக் குலைக்கச் சதி செய்தனர்.

ஒரு இளம் பெண்ணை ராமாமிர்தம் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி ராமாமிர்தத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. ராமாமிர்தம் கலங்கிடவில்லை. கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட அதே பெண்ணை, உயிருடன் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். யாரெல்லாம் அந்தப் பெண்ணை மறைத்து வைத்துக் கொடுமைப்படுத்தினர் என்பதை அம்பலப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு தேவதாசி முறையையே அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்று, அதற்காகப் போராடத் தொடங்கினார் ராமாமிர்தம். அவருடைய லட்சியத்துக்கு உறுதுணையாய் நின்றார், அவருடைய கணவர் சுயம்புப் பிள்ளை.

Special Correspondent

முதல் முதலாக 1917 ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை பகுதியில் தனது போராட்டத்தைத் துவங்கினார் ராமாமிர்தம். தேவதாசிப் பெண்களிடம் சென்று ‘இந்த இழிவான வாழ்க்கையில் இருந்து விடுபடுங்கள்’ என்று கூறினார்.

அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘நாகபாசத்தார் சங்கம்’ என்கிற அமைப்பை ஆரம்பித்தார். பிற்பாடு அது இசை வேளாளர் சங்கமாக மாறியது அவர்களைக் கொண்டு இரண்டு பெரிய மாநாடுகளையும் கூட்டினார்.

இதனால் அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். பெரும் அரசியல் தலைவர்கள், ஜமீன்தார்கள், மைனர்கள், காவல் துறையினர், உயர் வகுப்பினர், ரவுடிகள் என்று பல தரப்பினரும் ராமாமிர்தத்தின் போராட்டத்தை நசுக்கவே முயன்றார்கள். கொடுமையின் உச்சம் என்ன் வென்றால் தேவதாசி இனத்தவரும், அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது காங்கிரசு கட்சியில் இருந்த பெரியார், தி.ரு.வி.க, வரதராஜுலு போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். அதனால் அரசியல் பின்புலம் தேவைப்படவே காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்தார்.

பின்னர் இட ஒதுக்கீடு பிரச்சினையில் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறியபோது அவர்களுடன் சிங்காரவேலர் போன்றவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறினார்கள். அவர்களுடன் ராமாமிர்தமும் வெளியேறினார்.

அதற்குப் பிறகு, பெரியார் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்த போது அதில் பங்கு கொண்டு பெரும் பங்காற்றினார். இதில் ‘குடியரசு’ இதழில் ராமாமிர்தத்தின் அனல் பறக்கும் கட்டுரைகள் அந்த காலத்தில் பிரபலம் ..சுயமரியாதை இயக்க கொள்கைத் திட்டம் உருவாக்கும் போது, உடன் இருந்த ஒரே பெண் மூவலூர் ராமாமிர்தம்தான்..

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காக சட்ட மன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் நல்ல நட்பு இருந்தது.

1930ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

அமெரிக்காவில் கறுப்பின அடிமைகள் அனுபவிக்கும் துயரங்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்தாலும், அதைப் பற்றி அமெரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கறுப்பின அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு வழிகோலிய உள்நாட்டுப் போருக்கு தொடக்கமாகவும் அமைந்தது ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் அம்மையார் எழுதிய ‘அங்கிள் டாம்ஸ் காபின்’ என்ற நாவல்.

அதே போன்று ‘தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்கிற நாவலை 1936 ஆம் ஆண்டு வெளியிட்டார் ராமாமிர்தம் அம்மையார். அது தேவதாசிகளின் பரிதாப வாழ்வையும், சொந்த அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டது. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட இந்த நாவலை ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லலாம். இந்த நாவலைப் பற்றிய ராமாமிர்தம் அம்மையாரே குறிப்பிடுவது என்னவென்றால், ‘புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்’, என்கிறார்.

1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938ல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

1930 இல் தோற்றலும் 17வருடமாக தொடர் போரட்டம் நடத்தி 1947லிருந்து தேவதாசி முறை ஒழிப்புச் சட்ட தீர்மானத்தை கொண்டு வந்த போது அப்போது காங்கிரசில் இருந்த சனாதனவாதிகள் இதனை கடுமையாக எதிர்த்தனர். அதில் முக்கியமானவர் ‘தீரர்’ சத்தியமூர்த்தி.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அந்தச் சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானம் இயற்றியபோது, ‘தேவதாசி முறை தொடர்ந்து நடக்க வேண்டும்.. இல்லாவிட்டால் பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரம் சீரழிந்து விடும்’ என்று ஆவேசப்பட்டார்.

அப்போது முத்துலட்சுமி அம்மையார். ‘அவர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என விரும்பினால், இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க, இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’ என்றார்.

அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சனாதனவாதிகள். பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947 ஆம் வருடம், உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானமாய் விளங்கிய தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் ரகசியமாகப் பல இடங்களில் அந்த முறை தொடர்ந்து நடந்து வந்தது. அங்கெல்லாம் நேரடியாகச் சென்று, விசாரணை நடத்திப் பல பெண்களை விடுவித்தார். அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து, எழுத்து மூலமும் கலை மூலமும் புரட்சியை செய்தார் ராமாமிர்தம் அம்மையார்.

தி.மு.க சார்பில் 1956 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்திற்காக உழைத்தவர்களுக்குத் தி.மு.க சார்பில் விருதுவழங்கிச் சிறப்பிக்க அண்ணா முடிவு செய்தார். இதற்கு அவர் முதலில் தேர்வு செய்த பெயர் மூவலூர் அம்மையார் பெயர்தான்.

அம்மையாரின் இறுதி ஆண்டுகள் மயிலாடுதுறையிலேயே கழிந்தன. முதுமையிலும் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. கண்பார்வை மங்கிவிட்டபோதும் தமது வேலைகளைத் தாமே செய்து கொண்டதுடன் சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட்டார். சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சிப் பெண்மணி 1962 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் நாளில் தமது 70-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய் 5000-த்தை 15000 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது அதற்க்கு அம்மையாரின் நினைவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தின் பலன்களை பின்னர் வந்த அதிமுக முதலவர் ஜெயலலிதாவும் விரிவுபடுத்தினார் என்பதும் குறிப்பிடதக்கது.

இன்றைக்குத் தேவதாசி முறை திராவிட அரசியல் கொள்கை சட்டமாக எற்றபட்டதால் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும் இன்றும் தமிழ்நாட்டில் வேலூர், காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர்.

விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர், புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது. திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் உள்ளது என்றும் செய்திகள் உள்ளன...

1990களில் வெற்றிகரமாக ஒடிய படத்தின் கிழக்கு வாசல் என்ற திரைப்படத்திலும் தேவதாசி ஜமின் தொடர்பு பழக்கம் சொல்லப்பட்டு இருப்பதை பார்க்கலாம்...

Special Correspondent

தேவதாசி மரபில் வந்தவரும் கலைத்திறமையும், புலமையும் கொண்டவரான பெங்களூர் நாகரத்தினம்மா தன்னுடைய சுயசரிதையைக் கன்னடத்தில் எழுதி இருக்கிறார்.

அண்மையில் திருநங்கைத் தோழியரான லிவிங் ஸ்மைல் வித்யா ‘என் பெயர் வித்யா’ என்று எழுதிய சுயசரிதை, சில கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தைத தேவதாசியர் பார்வையிலிருந்து பரிசீலனை செய்யும்போதே கற்பொழுக்கம் குறித்த ஆணிய இரட்டை அளவுகோல்கள் புலப்படும்.

“தாசிகளுக்குப் புத்திசாலித்தனமான ஆராய்ச்சி கிடையாது. பொருள் தேடும் ஆராய்ச்சியும் தாசிகளுக்குக் கிடையாது. பொருள் தேடும் பேராசையால் யார் எப்படிச் சொன்னாலும், அப்படியே நடப்பார்கள். ஆனால், எவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் பொருள் தேடினாலும் கடைசி காலத்தில் இளிச்சவாய்த்தனமாய் யாரிடத்திலாவது கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள். எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா?” என்று தனது நாவலில் வேதனையோடு கேட்டு இருப்பார் ராமாமிர்தம்.

காலம் காலமாக புரையோடி இருந்த இந்து மதத்தின் ஒரு அங்கமான தேவதாசி முறையை அந்த சமுகத்தில் இருந்தே அந்த சமுகத்தின் எதிர்ப்பின் வழியே உறுதியாக எதிர்த்து நின்று சாதிப்பது என்பது சாதாரணம் அன்று.

அதை உறுதியோடு சாதித்து காட்டிய பெண்மையை வணங்கி போற்றுவோம்...

தொடர்பு செய்திகள் : உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்