சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலிலேயே மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

Special Correspondent

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற பெண் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இன்று கல்லூரி வாசலில் அஸ்வினி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அஸ்வினியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதன் காரணமாக அஸ்வினி மயங்கிச் சரிந்தார்.

அவரை உடனடியாக கூடியிருந்தவர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதே சமயம் அவரைக் கத்தியால் குத்திய வாலிபரை அங்கு இருந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்து கே.கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதேசமயம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்வினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அஸ்வினியின் தோழிகள் மற்றும் கல்லூரியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட விசாரணையில் மாணவி அஸ்வினியை கத்தியால் குத்திய வாலிபர் பெயர் அழகேசன் என்றும் அவர் மதுரவாயலில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்து உள்ளது. அழகேசன் சுகாதாரதுறையில் வேலை பார்த்து வருகிறார்.

இதனிடையே மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த அழகேசன் ஏற்கனவே அவருக்கு பலமுறை தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அஸ்வினி அழகேசன் மீது மதுரவாயல் போலீசில் புகார் ஒன்று அளித்து உள்ளார். அஸ்வினி மதுரவாயல் ஆலபாக்கத்தை சேர்ந்தவர் ஆவார்.

அழகேசன் தொல்லையிலிருந்து தப்பிக்க அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அஸ்வினி மீது ஆத்திரத்தில் இருந்த அழகேசன் அவரை கல்லூரி வாயிலில் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.