பயணிகளும், வாகன ஓட்டிகளும் தங்கள் பொறுப்புணர்ந்து சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Special Correspondent

அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்வதாக வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதனை தானாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை ஆஜரான வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், திருவொற்றியூர் -பாரிமுனை வழித்தடத்தில் இயக்கப்படும் மாநகரப் பேருந்தில் (56சி) பயணித்த விக்கி என்ற 9 -ஆம் வகுப்பு மாணவர் தவறி கீழே விழுந்து இறந்தது குறித்து முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள், 'நாள்தோறும் நடைபெறும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. திருச்சியில் நடந்த சம்பவத்தில்கூட தலைக்கவசம் அணியாமல் சென்றதால் வாகனம் ஓட்டியவரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் விரட்டியுள்ளனர். வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காகவே தலைக்கவசம் அணிவதை போலீஸார் சட்டரீதியாக வலியுறுத்துகின்றனர். பேருந்தில் பயணம் செய்தபோதுதான் மாணவன் விக்கி தவறி விழுந்து இறந்துள்ளதுள்ளதாகத் தெரிகிறது. பயணிகளும், வாகன ஓட்டிகளும் சட்டத்தை மதித்து தங்கள் பொறுப்புணர்ந்து சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கை தொடர்பாக புதிதாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' எனத் தெரிவித்தனர்.