தமிழ்நாட்டில் பல குவாரிகள் மூடப்பட்ட நிலையில், இப்போது 9 குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன. அவற்றிலும், நாள் கணக்கில் லாரிகள் காத்துக் கிடப்பதால், மணலுக்கு இப்போது டிமான்ட் ஆகிவிட்டது.

Special Correspondent

மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுவதால், கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன. அதனால், மணல் தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில், தனியார் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை, அரசே வாங்கி விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. அதாவது, தனியார் இறக்குமதி செய்யும் மணலை, தமிழக அரசு வாங்கி, பொதுப்பணித்துறை மூலம் விற்பனை செய்யும்.

மணல் விற்பனை செய்வதற்கு 11 வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. .அதன்பிரகாரம், 548 கோடி ரூபாய் மதிப்பில் 30 லட்சம் மெட்ரிக் டன் மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மணல் விலையை அந்தந்த நாட்டிற்கு ஏற்றாற்போல் அரசே நிர்ணயம் செய்துவிடும். வெளிநாட்டு மணலை நேரடியாக தனியார் விற்பனை செய்யக் கூடாது என்பது நெறிமுறையின் ஒரு அம்சம். தூத்துக்குடி, எண்ணூர், மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் வழியாக, வெளிநாட்டு மணல் தமிழகத்துக்கு கொண்டுவரப்படும் எனச் சொல்லி இருக்கிறது பொதுப் பணித்துறை.

ஏற்கனவே, புதுக்கோட்டையைச் சேர்ந்த எம். ஆர். எம். ராமையா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மலேசியாவிலிருந்து 54,000 டன் மணலை தமிழ் நாட்டில் இறக்குமதி செய்தது. தமிழகத்தைக் காட்டிலும் குறைந்தவிலையில் இந்த மணல் அங்கு கிடைக்கிறது.

இறக்குமதிக்குப் பிறகு, தமிழக மணல் விலையைவிடக் குறைந்த விலைக்கு, விற்க முடியும் என்பதால் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது அந்த நிறுவனம்.

முறையான ஆவணங்களுடன் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு இந்த மணல் கொண்டுவரப்பட்டது. ரூ.7.75 கோடி மதிப்புள்ள அந்த மணலுக்கு ரூ.2. 88 கோடி சுங்க வரி செலுத்தியுள்ளனர்.

மேலும், ஜிஎஸ்டி-யாக ரூ.38 லட்சம் செலுத்தியுள்ளனர். அந்த நிறுவனம். ஆரம்பத்தில் 1,000 டன் மணல் வரை கேரளாவுக்கும், தமிழகத்தின் சில பகுதிகளுக்கும் கொண்டுசென்ற நிலையில், திடீரென மாவட்ட நிர்வாகமும் கனிமவளத் துறையும் இறக்குமதி மணலைத் துறைமுகத்தில் இருந்து வெளியே வரவிடாமல் தடுத்துவிட்டனர்.

இந்த இறக்குமதி மணலை வெளியே எடுத்துச் செல்வதற்கு அனுமதி வேண்டி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தது அந்த நிறுவனம். இறக்குமதி மணலை வெளியே எடுப்பதற்கு, அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், அரசு அதிகாரிகள் மேல் முறையீடு செய்தனர். அதனால், 54 ஆயிரம் டன் மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கிறது.

ஏற்கனவே, உள்ளூரில் உள்ள குவாரிகளில் உள்ள மணலைச் சுரண்டி விற்றாகிவிட்டது. இனி சுரண்டுவதற்கு எதுவும் இல்லை என்பதால், வெளிநாட்டு மணலிலும் கை வைக்க ஆரம்பித்திருக்கிறது எடப்பாடி அதிமுக அரசு என்கிறார்கள் சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள்...