இந்தியாவில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு சகல வசதிகளுடன் கூடிய தனித்தனி விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Special Correspondent

நாட்டின் முதல் குடிமகன் என்றழைக்கப்படும் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை பொறுப்பு ஏற்று நாட்டையே ஆளும் பிரதமர் ஆகியோர்க்கு ஏற்கனவே தனி விமானம் இருக்கிறது. தற்போது அவர்கள் விமானப் படை விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏர் இந்தியாவின் தனி விமானத்தில் பயணம் செய்கின்றனர். இதற்கான வாடகையை அரசு அளித்து வருகிறது. தற்போது இவர்கள் போயிங் 747 விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய தனித்தனியான நவீனரக விமானங்களை வாங்க பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பயணிக்க 2 போயிங் 777-300 ERS விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானங்களில் ஒரு கலந்தாய்வு அறை, ஒரு அவசர சிகிச்சை அறை, ஓய்வு அறை, பத்திரிகையாளர்கள் சந்திப்பு அறை, வைஃபை வசதி உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட்டிருக்கும். மேலும் எந்த ஆயுதங்களாலும் இந்த விமானத்தை தாக்க முடியாத அளவிற்கு கட்டமைக்கப்பட்டிருக்கும்.

டெல்லி - அமெரிக்கா இடையில் எங்கும் நிற்காமல் சென்று வர தேவையான அளவிற்கு எரிபொருள் நிரப்பும் வசதி இந்த விமானங்களில் உள்ளது.

இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.4,469 கோடி வரை நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானங்களை இயக்க சிறப்பு பயிற்சி பெற்ற 44 பைலட்கள் தயார் செய்யப்படுவது கூடுதல் செய்தி.