கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் புது தில்லியில் இன்று அறிவித்தார்.

Special Correspondent

இதன் மூலம் கர்நாடகாவில் இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது.

தேர்தலில் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும் விவிபிடி எந்திரம் பயன்படுத்தப்படும் என்றும், வேட்பாளர்களின் செலவீனத்தை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தேர்தல் செலவாக ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம் என்றும், கன்னட மொழியிலும் வாக்குச்சீட்டு விவரங்கள் அளிக்கப்படும் ,மற்றும் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்: ஏப்ரல் 17
கடைசி நாள்: ஏப்ரல் 24
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 25
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 27
ஓட்டுப்பதிவு: மே 12
ஓட்டு எண்ணிக்கை: மே 15

சுமார் 11 மணியளவில் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிரகாஷ் ராவத், தேர்தல் குறித்து விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து 11.30 மணியளவில்தான் அறிவித்தார்.

அதே சமயத்தில் 11 மணியளவிலேயே, பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அமித் மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில் கர்நாடகா தேர்தல் தேதி மே 12ம் தேதி என்பதை பதிவு செய்திருந்தார்.

இந்த டிவிட்டரைப் பார்த்த ஒரு சில ஊடகங்களும் அந்த செய்தியை ஒளிபரப்பின. இது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று விளக்கம் அளித்தார்.

இது குறித்து அமித் மால்வியாவின் டிவிட்டரை பலரும் பகிர்ந்திருந்தனர். உடனடியாக தனது பதிவை நீக்கிய அமித் மால்வியா, ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலைதான் தான் பகிர்ந்ததாக டிவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார்.

எனினும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமரிசனங்களும் எழுந்துள்ளன.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்திற்கு முன்னரே தேர்தல் தேதியை அறிவிக்கும் அளவிற்கு பாஜக சூப்பர் தேர்தல் ஆணையமாக மாறிவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. தேதியை கசிய விட்டதற்காக அமித் மால்வியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்குப்பதிவு செய்யப்படுமா ? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.