ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Special Correspondent

பலத்த சத்தத்துடன் தீயைக் கக்கியபடி மேலெழுந்த ராக்கெட், 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளை தாற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தியது.

சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய இரண்டாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி வியாழக்கிழமை மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாகத் தாண்டும்போதும், விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஏவப்பட்ட 2 நிமிஷங்கள் 31 விநாடிகளில் முதல் நிலை பாகமும், 4 நிமிஷங்கள் 45 விநாடிகளில் இரண்டாம் நிலை பாகமும் ராக்கெட்டிலிருந்து பிரித்து விடப்பட்டன.

பின்னர் 4 நிமிஷங்கள் 46 விநாடியில் கிரையோஜெனிக் என்ஜின் இயக்கப்பட்டு, திட்டமிட்ட தாற்காலிக பாதைக்கு மேலெழுப்பப்பட்டது.

பின்னர் ராக்கெட் ஏவப்பட்ட 17 நிமிஷங்கள் 31 விநாடிகளில் கிரையோஜெனிக் என்ஜின் நிறுத்தப்பட்டு, அடுத்த 4 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து என்ஜின் பிரித்துவிடப்பட்டது.

தொடர்ந்து ஏவப்பட்ட 17 நிமிஷங்கள் 47 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு, திட்டமிட்ட தாற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் செயற்கைக்கோள் படிப்படியாக உயர்த்தப்பட்டு, திட்டமிட்ட பூமியிலிருந்து 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இறுதிக்கட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், அங்கிருந்த இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் கிரண்குமார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சிவனுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வெற்றி மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 8-ஆவது வெற்றியை இஸ்ரோ பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 6 ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ இதுவரை 12 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது.

இதில் 8 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, திட்டமிட்ட பாதையில் செயற்கைகோளை இஸ்ரோ நிலைநிறுத்தியுள்ளது. 4 முறை மட்டும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது.

விண்ணில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைகோளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள். இது பன்முனை எஸ்-பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது.

எனவே, இந்த வெற்றி இஸ்ரோவுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என அதன் தலைவர் சிவன் கூறினார்.

ஜிசாட்-6ஏ செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, சக விஞ்ஞானிகளுக்கிடையே சிவன் பேசினார். அப்போது அவர் " இப்போது கிடைத்த வெற்றி மிகப் பெரியது. ஏனெனில், ராக்கெட்டின் செயல்பாட்டைக் கூடுதலாக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, ஏற்கெனவே உள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைக் காட்டிலும், சிறப்பான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், ராக்கெட்டின் இரண்டாம் நிலையில் (திரஸ்ட் லெவல்) பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது ராக்கெட்டின் செயல்பாட்டை முன்பைவிட 6 சதவீதம் கூடுதலாக்கியுள்ளது. அதுபோல, இந்த ராக்கெட்டில் எலக்ட்ரோ இயந்திவியல் இயக்கவிசை கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. இந்த இயக்கவிசையானது, முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லித்தியான் பேட்டரிகள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது மிகப் பெரிய சாதனையாகும். இந்த பேட்டரி தொழில்நுட்பத்தை, எலெக்டிரிக் வாகன (இ-வாகனம்) துறையிலும் பயன்படுத்துவது குறித்து இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மேம்பட்ட தகவல் தொடர்பு: இப்போது விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள், ஏற்கெனவே அங்கு செயல்பாட்டில் இருக்கும் ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் இணைந்து, இந்தியாவுக்கு பயனளிக்க உள்ளது. குறிப்பாக மேம்பட்ட தகவல் தொடர்பு, ஆன்ட்டனா மற்றும் சாட்டிலைட் தகவல் தொடர்புக்கு பெரிதும் பயனளிக்க உள்ளன என் கூறினார்.

மேலும் பேசிய அவர் அடுத்த 9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. தகவல்தொடர்புக்கு, கடல்போக்குவரத்துக்கு, உயர் திறன் கொண்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் என பல்வேறு துறைகளுக்கு உதவக் கூடிய வகையிலான செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்து அனுப்பப்பட உள்ளன. அடுத்த இரண்டு வாரங்களில் ஐ.ஆர்.எஸ்.எஸ்.-2 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மிக முக்கியமாக சந்திராயன்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது என்றார் அவர்.

ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவராக சிவன் பெறும் முதல் வெற்றி ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 08 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பொறுப்பேற்ற பின்னர் கிடைத்த முதல் வெற்றியாகும்.

அடுத்ததாக, நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ வரும் அக்டோபரில் விண்ணுக்கு அனுப்ப உள்ளது. 3,290 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்10 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது.

தொடர்ந்து கிராமப்புறங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்த கிராம வள மையங்களுக்கு உதவும் வகையிலான ஜிசாட்-29 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.