உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசும், அதற்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் தமிழக அரசும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது

Special Correspondent

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்:
பாஜக-வும், அதிமுக-வும் இணைபிரியாத கூட்டாளிகளாக செயல்பட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றும், மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்காமல் ஏனோ தானோ என்றே செயல்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அமைச்சரவையை கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், பிரதமரையும் கண்டித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உரிமைகளை காவு கொடுத்து பாரதிய ஜனதாவின் லாபத்திற்காக ஓவர் டைம் உழைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், ஊழல் வழக்குகளிலிருந்து தப்புவதற்காகவே தற்போதைய ஆட்சியாளர்களால் தமிழகத்தின் உரிமை விட்டு கொடுக்கப்படுவதாக சாடியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என கூறி தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும், தமிழக விவசாயிகளை நம்பவைத்து கழுத்தறுத்து விட்டதாகவும் சாடியுள்ளார். பாரதிய ஜனதாவின் கண் அசைவுக்கேற்பவே நாடாளுமன்றத்தில் அதிமுக கண்ணாமூச்சி ஆர்பாட்டம் நடத்தியதாக விமர்சித்துள்ளார்.

அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் ராஜினாமா செய்வதை வரவேற்கிறேன் என்றும், என்ன அழுத்தம் கொடுத்தாலும் மோடி செவி சாய்க்கமாட்டார் என்றும் மேலும் ஏப்ரல் 15-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகம் செய்த மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசின் செயல்பாட்டை எதிர்த்தும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படும் வகையிலும் ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்த வேண்டும். வேலைநிறுத்தத்தின் மூலம் தமிழகமே ஸ்தம்பித்தது என்கிற அசாதாரண நிலையின் மூலம் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் திரட்டி வேலைநிறுத்தத்தை நடத்துவது மிகவும் அவசியம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்):
காவிரி விவகாரத்தில் மத்திய அரசோடு சேர்ந்து தமிழக அரசு நாடகமாடுகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இருந்து மத்திய அரசைக் காப்பாற்றுவதற்காகத்தான் தமிழக அரசு நாடகம் ஆடுகிறது என்பதை மக்கள் அறிவர்.

ராமதாஸ் (பாமக) :
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆறு வாரங்கள் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகுவது நம்பவைத்து கழுத்தை அறுக்கும் செயல். தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பது நன்றாகத் தெரிந்தும் அதற்கு எதிராக செயல்பட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.

தொல்.திருமாவளவன் (விசிக) :
அதிமுக எம்.பி.-க்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்வது மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவாதமாக அமையும். இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, மத்திய அரசின் கவனத்தையும் ஈர்க்க முடியும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,
காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரத போராட்டம் தாமதமான நடவடிக்கை என விமர்சித்தார். எனவே காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக MP-க்கள் பதவி விலகி தியாகம் செய்ய தயாராக வேண்டும் என்றார். அப்படி செய்தால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியும் என குறிப்பிட்டார்.

விஜயகாந்த் (தேமுதிக):
6 வார காலத்துக்குள் வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது கண்டிக்கத்தக்கது. இது ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மாநில அரசும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.இல்லாவிட்டால், இரு அரசுகளையும் மக்கள் புறnjhந்தள்ளுவது உறுதி.

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): காவிரியில் தமிழக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக பாஜக முனைப்பாக இருக்கிறது. இது தொடர்பாக எங்களது கோரிக்கையை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தலைமையில் ஒரு குழு அமைத்து நமது உரிமையை வலிமையாக எடுத்துரைத்திருக்கிறோம்.

மத்திய அரசும் உச்சநீதிமன்றம் என்ன வலியுறுத்தியதோ அதை நிச்சயம் நிறைவேற்றும். நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் மத்திய அரசுக்கு கிடையாது.

அமைச்சர் ஜெயக்குமார் (அதிமுக):
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தை பொருத்த வரை எந்த கட்சியும் கொடுக்காத வகையில் அதிமுக அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்தார். மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றமே. அதை பின்பற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. மத்திய அரசு கடமையை செய்ய தவறியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்திடமே சென்று முறையிடுவதே சரியாக இருக்கும் என்றார். மேலும் தமிழக அரசு எதை செய்தாலும் குறை கூறுகின்றனர் என்றார். மாநில நலனுக்காகவே தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து வருவதாக குறிப்பிட்டார்.