கடந்த வாரம் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் விஞ்ஞானிகள் தேனி மாவட்ட மக்களுக்கு நியூட்ரினோ திட்டம் தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்கு அந்தக் கிராம மக்கள் பதிலளித்துள்ளனர்.

Special Correspondent

பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கையெழுத்திட்டு விஞ்ஞானிகளுக்குக் கடிதத்தை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தின் அம்மக்கள் கேட்ட கேள்விகள் தொகுப்பு இதோ :

1) உங்கள் ஆய்வுத் திட்டத்தின் விண்ணப்பத்தைத் தமிழகச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு நிபுணர்கள் ஏன் நிராகரித்தார்கள் என்று தெரியுமா?

2) நீங்கள் ஆய்வகம் அமைக்கவிருக்கும் அம்பரப்பர் மலையைப் பற்றியும் அதன் சுற்றுப்புறங்கள் பற்றியும் அந்த நிபுணர்கள் கூறியதை ஒருவேளை நீங்கள் மறந்திருக்கலாம். எனவே, அந்த விவரங்களை மீண்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

i) “மிகக் கடினமான பாறையில் சுரங்கம் தோண்டுவதற்கு, உயர்திறனுடைய வெடிமருந்துகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மேலும், அதிலிருந்து சுமார் 6 லட்சம் கனமீட்டர் அளவுக்கு பாறைக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்".

ii) “சுரங்கம் அமையும் மலை தரைமட்டத்திலிருந்து 1,485 மீட்டர் உயரமுடையது. இவ்வளவு ஆழத்தில் சுரங்கம் தோண்டும்போது பாறையின் கீழ் நோக்கிய அழுத்தம், ஒரு சதுரமீட்டருக்கு 270 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும். இதனால் சுரங்கத்தின் உள்பகுதியில் பாறை வெடிப்பு மற்றும் உட்புறச் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கான புவியியல் தொழில்நுட்ப அறிக்கை எதுவும் உங்கள் விண்ணப்பத்தில் இல்லை".

iii) “ஆய்வகம் அமைய உள்ள இடம், சர்வதேச அளவில் ‘பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வருகிறது. மேலும் இம்மலைப் பகுதி அரிய வகை தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள் மற்றும் வணிக முக்கியத்துவமுடைய மூலிகைகள் ஆகியவற்றின் புகலிடமாக விளங்குகிறது".>/p>

iv) “ஆய்வகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அருகிலுள்ள வைகை அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. ஐந்து மாவட்ட மக்கள் குடிநீருக்காகவும் விவசாயப் பயன்பாட்டுக்காகவும் வைகை அணையின் நீரை நம்பி வாழ்கின்றனர்".

v) அம்பரப்பர் மலையில் நீங்கள் உருவாக்க இருக்கும் நியூட்ரினோ ஆய்வக வேலைகளால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஆபத்துகளையும் மேற்கண்ட நிபுணர்கள் குழு அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. தவிர, நீங்களே நியமித்த தகுதியற்ற நிறுவனமான சலீம் அலி ஃபவுண்டேஷன் தனது அறிக்கையில், “வெடிமருந்துகளால் பாறைகளை உடைக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால், அருகிலுள்ள சுற்றுப்புறப் பகுதிகளிலும், அதன் புவியியல் அமைப்பிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபற்றி நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை” என்று கூறுகிறது.

3) தகுதியற்ற நிறுவனத்தை வைத்து ஆய்வுசெய்கிறீர்கள் அல்லது சுற்றுச்சூழல் ஆய்வே செய்யாமல் ஓடி ஒளிகிறீர்களே... ஏன்?

4) எங்களுக்குத் தீமை விளைவிக்கும் ஏதோ ஒன்றை மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

5) கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவுக்காக இவ்வளவு சிரமப்படும் நீங்கள், கண்முன்னே உள்ள எங்கள் பிரச்சினைகளைத் திரும்பிக்கூட பார்க்க மறுப்பது ஏன்?

6) உங்கள் திட்டத்துக்காக, 66 ஏக்கர் புறம்போக்கு நிலத்தைக் கையகப்படுத்தி உள்ளீர்களே... அது எங்கள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலம். எங்களுக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டு நாங்கள் அதைப் பயன்படுத்திவருகிறோம். வன நிலத்தை நம்பி வாழும் மக்கள் என்ற முறையில் இந்த மேய்ச்சல் நிலத்தின் மீதான சகல உரிமையும் எங்களுக்கு உண்டு. எங்கள் பொட்டிப்புரம் கிராம சபையின் முறையான அனுமதி பெறாமலே எங்களின் மேய்ச்சல் நிலத்தை, நியூட்ரினோ திட்டத்துக்கு ஒப்படைத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

7) உங்கள் ஆராய்ச்சிக்காகத் தினமும் 3.40 லட்சம் லிட்டர் தண்ணீரை எங்கள் முல்லைப் பெரியாற்றில் இருந்து எடுக்க உள்ளீர்கள். அந்தப் பெரியாற்று நீர், ஐந்து மாவட்டங்களின் லட்சக்கணக்கான மக்கள் தடியடி, துப்பாக்கிச் சூடு, சிறை, வழக்கு என்று போராடிப் பெற்ற உரிமை என்பது உங்களுக்குத் தெரியுமா?

8) உங்கள் ஆய்வகத் திட்டத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள், குடிநீர் வசதி கேட்டு மாநில அரசிடம் நீண்டகாலமாக கையேந்தி வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா விஞ்ஞானிகளே?
“மிகவும் மேடான பகுதியாக இருகிறது” என்பதைக் காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை இன்றுவரை மறுத்து வருகிறார்கள் அதிகாரிகள். ஆனால், எங்களைவிட உயரமான மேட்டுப்பகுதியில் இருக்கும் உங்கள் திட்டத்துக்கு உடனடியாக தண்ணீர் வசதியை செய்து கொடுத்துள்ளது அரசு. அடிப்படையான குடிநீர் வசதி பெறும் உரிமையைக்கூட, உங்கள் அறிவியலுக்காக நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?

9) நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தின் விஞ்ஞானிகளும் உங்கள் ஆதரவாளர்களும் எங்கள் கிராமத்தைப் பற்றி இடத்துக்குத் தகுந்தாற்போல பொய்யான தகவல்களைக் கூறி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரும் எங்கள் கிராமத்தின் பக்கம் தலைகாட்டியதுகூட கிடையாது. இது எங்கள் மனதை மிகவும் புண்படுத்துவதாக இருக்கிறது. திறந்த மனதுடனும் வெளிப்படையாகவும் இருப்பதுதான் அறிவியல் என்ற உண்மையை இவர்களுக்குத் தயவுசெய்து புரியவையுங்கள்.

10) அம்பரப்பர் மலையை நாங்கள் கடவுளாக வணங்கிவருகிறோம். எங்களின் வழிபாட்டுச் சின்னங்கள் நீங்கள் சுரங்கம் தோண்டும் மலையின் மீது இன்றும் உள்ளன. எங்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்ல; பல்வேறு இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் இம்மலைதான் எங்களைப் பாதுகாத்துவருவதாக, பல தலைமுறைகளாக நாங்கள் நம்பி வருகிறோம். எங்கள் கலாச்சார பண்பாட்டு விஷயங்களை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. ‘ராமர் கட்டிய பாலம்’ என்று நம்பப்படும் காரணத்துக்காக சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. அப்படியானால் எங்கள் அம்பரப்பர் கடவுளுக்காக நியூட்ரினோ திட்டத்தை இங்கிருந்து விலக்கிக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

11) இறுதியாக ஒரு விஷயம். “நியூட்ரினோ ஆய்வுகள் மூலம் வேறு இடங்களில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க முடியும்” என்று டாக்டர் அப்துல் கலாம், திரு. ராஜசேகரன் ஆகிய விஞ்ஞானிகள் எழுதிய செய்திகளை நாங்களும் படித்திருக்கிறோம். நாங்கள் அமைதி - அன்பு - எளிமை ஆகியவற்றைப் பெருமையாகக் கருதுபவர்கள். வனக்காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள் போன்ற இயற்கை வளங்களை நம்பி வாழ்பவர்கள். இதைச் சீர்குலைக்கும் வகையில், அணு ஆயுதங்கள் புழங்கும் பகுதியாக எங்கள் ஊரை மாற்றுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வளவு கேள்விகளை கேட்ட தேனி மாவட்ட கிராமத்து மக்கள் மேலும் தெரிவித்த விவரம் "நாங்கள் வன்முறையற்ற அமைதி வழியைப் பின்பற்றுகிறவர்கள். அடிப்படையில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள். விஞ்ஞானிகளாகிய நீங்களும் இதற்கு எதிரானவர்கள் அல்ல என்று நம்புகிறோம். எங்களுக்கு உடன்பாடு இல்லாத ஒரு திட்டத்தை, எங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் திட்டத்தை, எங்களிடம் ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம்கூட நடத்தாமல், எங்கள் மீது திணிப்பது அநீதியானது என்று கருதுகிறோம்.

விஞ்ஞானிகளாகிய நீங்கள் அறிவியல் என்ற பெயரில், எங்களின் இயற்கை வளங்களை அழிக்க நினைக்கிறீர்கள். நாங்களோ அதைப் புனிதமாகக் கருதி காப்பாற்ற முயற்சிக்கிறோம். இந்த ஜனநாயக நாட்டில் எங்களை அமைதியாக வாழ அனுமதியுங்கள். அனைத்து விஞ்ஞானிகளும் நீண்ட ஆயுளும் அர்த்தமுள்ள வாழ்வும் பெற தேனி மாவட்ட மக்களின் சார்பாக வாழ்த்துகிறோம்! என பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கையெழுத்திட்டு விஞ்ஞானிகளுக்குக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.