மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்ட தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் கல்வி ஆண்டில் 1500 அரசு தொடக்க பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Special Correspondent

10 மாணவர்களுக்கு குறைவாகப் படிக்கும் அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்படும் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முதலாக 800 பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது. 800 பள்ளிகளை மூடுவது பற்றிய அரசாணை ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் "1,500 தொடக்க பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலர் அண்ணாமலை.

அவர் மேலும், "பள்ளிகளை மூடவில்லை இணைக்கின்றோம் என கூறுகிறார் அமைச்சர். இணைக்கின்றோம் என்ற பெயரில் பள்ளிகளை மூடுகிறார்கள். இது ஆசிரியர் விரோதப்போக்கு என்பதைவிட மக்களின் விரோதப்போக்கு என்பதே சரி.

அரசாணை 101ன் படி பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலரிடம் அதிகாரத்தை குவிப்பது ஊழலுக்கே வழிவகை செய்யும். மாவட்ட அளவில் பணி செய்ய போதிய அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது.

மாவட்டத்தின் மொத்த அதிகாரத்தையும் முதன்மை கல்வி செயலருக்கு அளிப்பது தவறு" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசு தரப்பில் கல்வி உரிமைச் சட்டம் காரணமாக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் மூலம் வரும் ஆண்டில் 1.25 லட்சம் பேர் தனியார் பள்ளியில் சேரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது என சொல்லபடுகிறது.

டாஸ்மாக் மது கடைகளை குறைக்க துப்பில்லை ஆனால் 800 பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது வெட்ககேடானது என்று சமுகதளத்தில் பதிவுகள் செய்து வருகின்றனர்.