திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரித்து அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த ஜெயலலிதா கைரேகை வைத்தார். இதில் சந்தேகம் இருப்பதாகவும், திருப்பரங்குன்ற அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்தும் அத்தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Special Correspondent

இந்த வழக்கில் ஜெ. கைரேகையை அங்கீகரித்த அரசு மருத்துவர் பாலாஜி கைரேகை பெரும் போது ஜெ. வுடன் சசிகலா இருந்ததாகவும், தனக்கு அடையாறில் எந்த தனியார் மருத்துவமனையும் இல்லை என சாட்சியமளித்தார். இந்நிலையில் இன்று நீதிபதி வேல்முருகன் முன் மீண்டும் ஆஜராகி சாட்சியமளித்த பாலாஜி:

ஜெ. கைரேகையை பெரும் போது அந்த அறையில் சசிகலா இல்லையென்றும், அடையாறில் தனியார் மருத்துவமனை இருப்பது உண்மை தான் என்றும் அது தனது மகன் அபினவ் பாலாஜி பெயரில் இயங்குவதாகவும், மாலை நேரத்தில் மட்டும் அங்கு சென்று தான் சிகிச்சை அளித்ததாகவும் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கைரேகையை தான் சான்றளிக்க சுகாதார செயலாளரிடமோ அல்லது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனிடமோ தான் அனுமதி பெறவில்லை என தற்போது அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், செயற்கை சுவாசம் பொருத்தினால், அந்த நபர் சற்று மயக்க நிலையை இருப்பார்கள். ஜெவும் அந்த நிலையில் இருந்தாரா என கேள்வி கேட்டதற்கு தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என பதிலளித்தார்.

கைரேகை வாங்கப்பட்ட அந்த ஆவணத்தின் தேதியில் திருத்தம் ஏதும் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு "ஆமாம்" என பாலாஜி பதிலளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27 அளித்த சாட்சியம் தொகுப்பின் விவரம்.