இறந்தவரகளின் உடலை ஆம்புலன்ஸ் இல்லாமல் சுமந்து செல்லும் அவலம் ஒடிஸா, உத்திரபிரதேசம், போன்ற வட மாநிலங்களில் மட்டுமே நடக்கும் என்ற நிலை மாறி அதை போன்றே அவலம் தமிழகத்தின் மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

Special Correspondent

திருச்சி மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ளது அயன்புதுப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் கட்டிட தொழிலாளி. இவர் தன் மனைவி சின்னபொண்ணுவை கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த 25-ஆம் தேதி மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சின்னப்பொண்ணு நேற்று இரவு உயிரிழந்த நிலையில் மனைவியின் உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டிருக்கிறார் மதியழகன். பல முறை கெஞ்சியும் கதறியும் பார்த்து உள்ளார்கள் அவரின் குடும்பத்தினர் .

ஆனால் அரசு ஊழியர்கள் அலட்சியமாக பதில் சொல்லியிருக்கிறார்கள். சுமார் 6 மணி நேரம் வரை உடலை வைத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

மதியழகன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச் செல்ல முயன்ற போதும் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பின்னர் மதியழகன் தகாறு செய்த பின்னர் ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. ஆனால் அந்த ஆம்புலன்சில் உடலை ஏற்ற ஸ்ட்ரெக்சர் கொடுக்காமல் இழுத்தடிக்க மகனும் தந்தையுமாக சேர்ந்து சின்னப்பொண்ணுவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி ஊருக்கு கொண்டு சென்றார்கள்.

அரசு மருத்துவமனைகள் லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கு எவ்வித வசதிகளும் கிடைக்காது என்பதற்கு சின்னபொண்ணுவின் உடலை மனித நேயமின்றி அலைக்கழித்த சம்பவம் உதாரணமாக உள்ளது.

தலைவிரித்து ஆடும் அவலம் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது லஞ்ச ஒழிப்பு துறை இப்போதாவது விழித்து கொண்டு தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.