அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து தனி அணியாக இயங்கி வரும் தினகரன் அணியினர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

Special Correspondent

இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசு கொறடா பரிந்துரை செய்த அன்றே 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, 3 வாரத்துக்குள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் ., உயர்நீதிமன்றம் 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகள் காலி என அறிவிக்கக்கூடாது, சட்டப்பேரவையை கூட்டக்கூடாது என்ற உத்தரவுடன் முதலமைச்சர், சட்டப்பேரவைச்செயலர், கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் தனபாலும் 500 பக்கங்கங்கள் கொண்ட பதில் மனுவை அளித்துள்ளார்.

சபாநாயகர் சார்பில் அவரது வழக்கறிஞர் அரிமா சுந்தரம், 500 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில், விதிகளுக்கு உட்பட்டே எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று அதிமுக கொறடா ராஜேந்திரன் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், சட்ட விதிகளின்படியே 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக சட்டசபை அதிகாரிகள் பலரும் நேரில் ஆஜராகினர்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி டிடிவி தினகரன் தரப்புக்கும், முகுல் ரோத்தகி, சோமையாஜி ஆகியோர் அரசு தரப்புக்கும் ஆதரவாக வாதாடினர்.

வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, ஓ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய திமுக கொறடா சக்கரபானியின் மனுவுக்கு அக்டோபர் 20ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி துரைசாமி விசாரித்த வழக்குகள், தற்போது நீதிபதி ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டன.