நாடு முழுவதும் உள்ள 327 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். ஆர்டிஓக்கள் லாரிகளை எந்தவித காரணமும் இன்றி நிறுத்தி அபராதம் வசூலிக்க கூடாது. டீசல் விலையை மாதத்திற்கு ஒரு முறையே நிர்ணயம் செய்ய வேண்டும். லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Special Correspondent

இந்த இரட்டை வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

ஆனால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்றும் (9ம் தேதி) நாளையும் (10ம் தேதி) நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்தது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் இன்றும், நாளையும் 93 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழகத்தை பொறுத்தவரை 4.5 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக 75 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்களும் பங்கேற்கின்றனர்.

இதனால், நாள் ஒன்றுக்கு ₹5 ஆயிரம் கோடி வர்த்தக இழப்பு ஏற்படும். தீபாவளி பண்டிகைக்கு 9 நாள் மட்டுமே இடைவெளியுள்ள நிலையில் 2 நாட்கள் நடத்தப்படும் லாரி ஸ்டிரைக்கால் வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளி, பருப்பு உள்ளிட்ட சரக்குகள் வரத்து கடுமையாக பாதிக்கப்படும். காய்கறிகள் வரத்தும் பாதிக்கப்படும். அதேபோல் சிவகாசி பகுதியில் இருந்து லாரிகளில் பட்டாசு கொண்டு செல்வதும் பாதிக்கப்படும்.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்துவோம். இன்று காலை 6 மணி முதல் லாரிகள் இயக்கப்படாது. வெளி மாநிலத்துக்கு லோடுகளை ஏற்றிச் செல்லமாட்டோம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் லாரி போக்குவரத்து தொழில் கடந்த 3 மாதமாக முடங்கியுள்ளது. மத்திய அரசு எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவேண்டும். தமிழகத்தில் சுமார் 4.50 லட்சம் சரக்கு லாரிகள் 2 நாட்கள் இயக்கப்படாது. தன்ராஜ் கூறினார்.