ஹிமாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய சட்டப் பேரவைக்கான பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Special Correspondent

ஹிமாச்சலப் பிரதேசத்தைப் பொருத்தவரை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய சட்டப் பேரவையில் காங்கிரஸின் பலம் 36-ஆகவும், பாஜகவின் பலம் 26-ஆகவும் உள்ளது.

மாநில முதல்வர் வீரபத்ர சிங் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அதை பிரதானப்படுத்தி பேரவைத் தேர்தலில் பாஜக பிரசாரங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, அமித் ஷா மகன் ஜெய் ஷா மீதான 16000 மடங்கு குபுக்கென்ன உயர்ந்த சொத்து குற்றச்சாட்டுகள், மத்திய பாஜக அரசின் மீதான விமர்சனங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சி களமிறங்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் ஹிமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்துள்ளார்.

மொத்தம் 68 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றும் டிசம்பர் 18-ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதற்காக மொத்தம் 7,521 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கக் கூடிய 136 வாக்குச் சாவடிகளும் அடங்கும். தொகுதிக்கு இரண்டு வீதம் அத்தகைய வாக்குச் சாவடிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்திலும் வாக்கு ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி, எவருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்துக் கொள்வதற்கான சாதனங்கள் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடனும் பொருத்தப்பட உள்ளன.

இம்முறை வேட்பாளர்களின் தேர்தல் செலவின வரம்பு ரூ.28 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாள்களுக்கு தங்களது செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே, குஜராத் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு ஏன் வெளியாகவில்லை என ஜோதியிடம்கேட்ட கேள்விக்கு, எப்படியாயினும் டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றார் அவர்.

ஹிமாச்சலப் பிரதேசம் தேர்தல் விவரம்

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்     : அக்டோபர் 23

வேட்பு மனுவைதிரும்பப் பெற கடைசி நாள் : அக்டோபர் 26

வாக்குப் பதிவு நாள்   : நவம்பர் 9

வாக்கு எண்ணிக்கை : டிசம்பர் 18