ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் புறநகரான வெபகுண்டா பகுதியில் ஒரு கூலி தொழிலாளியும், அவரது 28 வயது மனைவியும் வசித்துவந்தனர்.

Special Correspondent

கணவன்–மனைவிக்கிடையே நேற்று அதிகாலையில் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி, எங்கே செல்வது என்று தெரியாமல் விசாகப்பட்டணம் ரெயில் நிலையத்துக்கும், ரெயில்வே புது காலனிக்கும் இடையே உள்ள நடைபாதையில் ஒரு மரத்தின் கீழ் தங்கினார்.

மதியம் 2 மணி அளவில் சிவா (30) என்ற டெம்போ டிரைவர் கஞ்சா போதையில் அந்த பெண்ணை அடித்து உதைத்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை. சிறிது நேரத்தில் அந்த பெண்ணை சிவா பாலியல் பலாத்காரம் செய்தார்.

அப்போது அந்த வழியாக வந்தவர்களை சைகையால் யாராவது தடுக்க வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் யாரும் அவரது வெறிச்செயலை தடுக்கவில்லை.

அந்த வழியாக சென்ற சிலர் போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பகுதிக்கு வருவதற்குள் சிவா அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை சாலைக்கு மறுபுறம் ஒரு ஆட்டோவில் உட்கார்ந்திருந்த டிரைவர் செல்போனில் வீடியோவாக படம் பிடித்தார். அதனை போலீசாரிடம் அவர் காட்டினார். போலீசார் அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சிவாவை இரவில் கைது செய்தனர்.

ஒருவனது இத்தகைய வெறி செயலை பலரும் வேடிக்கை பார்க்க ஒரு சிலர் படம் பித்த இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.