நாட்டின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும், படம் திரையிடப்படுவதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, கடந்த ஆண்டு, டிசம்பர் முதல், அனைத்து தியேட்டர்களிலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காத, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலர், சக பார்வையாளர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Special Correspondent

இது குறித்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: மக்கள், பொழுது போக்கிற்காக சினிமா தியேட்டருக்கு செல்கின்றனர்.

தேச பக்தியை நிரூபிக்கும் இடம், அது அல்ல. தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்படும் போது, எழுந்து நிற்காத நபருக்கு, தேச பக்தி குறைவாக இருப்பதாக கருத முடியாது. தியேட்டர்களுக்கு வருவோர், டி - சர்ட்டுகள், அரைக்கால் சட்டை அணிந்து வந்தால், அது தேச பக்திக்கு பங்கம் விளைவிக்கும் செயல் எனக் கருதி, அதற்கும் தடை விதிக்க, மத்திய அரசு விரும்பலாம்.

பல்வேறு போட்டித் தொடர்களின் போது, விளையாட்டு மைதானங்களில், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அங்கு அமர்ந்திருக்கும் பார்வையாளர்களில், பாதிக்கு மேற்பட்டோருக்கு, அதன் பொருள் புரிவதில்லை. அது, ஏன் இசைக்கப்படுவது என்றும் தெரிவதில்லை. அவர்களில் பலர் எழுந்து நிற்பதும் கிடையாது. தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

எங்கெங்கு இசைக்கப்பட வேண்டும். அதன் விதிமுறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.