கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இளம் ஸ்விஸ் தம்பதி இருவர் கடந்த ஞாயிறு அன்று ஃபதேபூர் சிக்ரியில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு ரெளடிகளால் பின் தொடரப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

Special Correspondent

ரெளடிகளால் தாக்கப்பட்டதில் ஸ்விஸ் ஜோடிகளில் ஆண், குவாண்டன் ஜெரிமி கிளெர்க்குக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதோடு காது கேட்கும் திறனும் கடுமையான பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாக அவரைச் சோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்த ஸ்விஸ் தம்பதிகள் ஃபதேபூர் சிக்ரிக்கு வருவதற்கு முன்பு சனிக்கிழைமை அன்று தாஜ்மஹாலுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு வர, அவர் உடனடியாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இச்சம்பவம் குறித்து முழு விளக்கம் தருமாறு முதல்வர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

தனது நண்பர் தாக்கப்பட்டதை அறிந்து அவரை காப்பாற்ற வந்த குவாண்டனின் ஸ்விஸ் தோழியும் ரெளடிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். பின்பு அவரது கதறலைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த மனிதர்கள் இவர்களது உதவிக்கு வரத் தொடங்கியதும்... தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர். தப்பி ஓடியவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட்டுள்ளதாகவும் பிறர் காவல்துறையின் தேடுதல் வலையில் இருப்பதாகவும் ஆக்ரா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நேரத்தில் தனக்கேற்பட்ட இந்த மோசமான விபத்தைப் பற்றிப் பேசுகையில் குவாண்டன் ஜெரிமி கூறியது; நாங்கள் இருவரும் நேற்று தாஜ்மஹலைப் பார்த்து விட்டு இன்று ஃபதேபூர் சிக்ரிக்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போது அடையாளம் தெரியாத நால்வர் எங்களைப் பின் தொடர்ந்தனர். எங்களது அனுமதியில்லாமல் அவர்கள் என்னையும், எனது தோழியையும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். அறிமுகமில்லாத அந்த நால்வரும் எங்களை வீண் சண்டைக்கு இழுக்கப் பலவாறு முயன்றனர். அவற்றைப் பொருட்படுத்தாமல் நாங்கள் எங்கள் வழியில் நடந்து வந்து கொண்டிருந்த போது தான் திடீரென என்னைத் தாக்கத் தொடங்கினர்.

எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த எனது தோழி சத்தம் கேட்டு எனக்கு உதவ ஓடி வர, அதைத் தொடர்ந்து நால்வரும், தங்களிடமிருந்த ஸ்டிக் போன்ற ஆயுதத்தால் என்னைக் கடுமையாகவே தாக்கத் தொடங்கி விட்டனர். இதனால் என் தலை உடைந்து கடுமையான காயம் ஏற்பட்டதோடு, எனது செவிகளின் கேட்கும் திறனும் இப்போது பாதியாகக் குறைந்து விட்டது. என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சுற்றுலா துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கையேட்டில் தாஜ்மகால் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சாம் பேசுகையில், தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை முதன்மையாக எழுப்பி வருபவர்களில் ஒருவரான பிஜேபி எம்பி வினய் கட்டியார் “ இந்துக்கள் சிவபெருமானுக்காக கட்டிய கோவிலை ஷாஜகான் கைப்பற்றிக்கொண்டார். தாஜ்மஹால் வெறும் கல்லறை மட்டும் என்றால், ஏன் இத்தனை அறைகள் கட்ட வேண்டும். நாட்டின் எந்த பகுதியில் உள்ள எந்த கட்டிடத்தையும் உடைக்க தேவையில்லை. தாஜ்மகாலின் பெயரை மட்டும் தேஜோ மகால் என மாற்ற வேண்டும்." என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.