அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக் கோரியும் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Special Correspondent

திங்களன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு நூதன முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை தரமணியில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் வளாகத்தின் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் வீ. மாரியப்பன், மாநில நிர்வாகி நிருபன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

சென்னை அருகே உள்ள சோழிங்க நல்லூர் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

காவல் துறையினர் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் விலக்கக் கூறி - திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் (அதிமுக, பாஜக தவிர) தொடர்ச்சியாக போராடி வருகின்றன.