குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி வழக்கை அக்டோபர் 12-க்கு ஒத்திவைத்துள்ளார்.

Special Correspondent

முன்னதாக தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 19-ம் தேதி திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அப்போது, அவையில் காட்டுவதற்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டுவந்ததாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது பேரவை உரிமைக் குழு விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவை உரிமைக்குழு ஆகஸ்ட் 28ம் தேதி கூடி விசாரித்து, பேரவைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்தது தொடர்பாக செப்டம்பர் 5ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக 21 தி.மு.க உறுப்பினர்களும் பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து முழுமையாக விளக்கம் அளிக்க 15 நாள் கால அவகாசம் கோரினர். இந்நிலையில், உரிமைக்குழுவின் நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செப்டம்பர் 14-ம் தேதி வரை ஸ்டாலின் உள்பட 21 பேர் மீது உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க தடைவிதித்தனர்.

மறு உத்தரவு வரும்வரை குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டும் வரும் முன்னரே திமுக எம் எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெவித்துள்ளனர்.