பாரதிய ஜனதாவில் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்பியுமான, மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

Special Correspondent

மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று 2012-ம் ஆண்டிலேயே நான் குரல் கொடுத்தேன். ஆனால், பாரதீய ஜனதாவில் மோடிக்கு எதிராக இருந்தவர்கள் இந்த விவகாரத்தில் என்னை கடுமையாக எதிர்த்தனர். என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கு உரிய வேலைகளை செய்தார்கள்.

எல்.கே. அத்வானி, நிதின்கட்காரி போன்றவர்கள் என்னை பல முறை சந்தித்து மோடியை ஆதரிப்பதை கைவிடுமாறு கூறினார்கள். அவ்வாறு செய்தால் கட்சியை விட்டு நீக்க மாட்டோம் என்றும் கூறினார்கள்.

ஆனாலும், நான் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர முயற்சி எடுப்பார் என்று நம்பினேன்.

காங்கிரஸ் செய்த அதே தவறை நீங்களும் செய்கிறீர்கள். 2014 தேர்தலின் போது கருப்பு பணம் மீட்புக்காக உங்களை ஆதரித்தேன். நான் அப்போது செய்தது முட்டாள்தனமானது என்பதை நான் இப்போது உணருகிறேன்.

2014 நாடாளுமன்ற தேர்தலின் போது வெளி நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள ரூ.90 லட்சம் கோடியை திரும்ப கொண்டு வருவேன். அந்த பணம் மூலம் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவேன் என்று கூறினீர்கள். ஆனால், இதை எதையுமே செய்யவில்லை. கருப்பு பணம் மீட்புக்கு நான் எடுத்த நடவடிக்கைக்கும் நீங்கள் ஒத்துழைப்பு தர வில்லை. இதன் மூலம் நாட்டையே ஏமாற்றி விட்டீர்கள்.

கருப்பு பணத்தை மீட்போம் என்று சொன்னதே தேர்தல் ஸ்டண்டுக்காக சொல்லப்பட்ட வார்த்தை. அது ஒரு நகைச்சுவை என்பது போல் அமித்ஷா வின் பேச்சு இருந்தது. அதாவது கருப்பு பணம் மீட்பு வி‌ஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வில்லை. நான் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள்.

இது சட்ட விரோதமானது. இது சம்பந்தமாக நான் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள இருக்கிறேன்.

2019 தேர்தலில் நீங்கள் அவமான கரமான தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மோடியின் அதி தீவிர ஆதரவாளர் மோடிக்கே ஆவேசத்துடன் கடிதம் எழுதியது பரபரப்பை பிஜேபி யினர் மத்தியில் உண்டாக்கி உள்ளது...

இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞர் ப ராம்ஜெத்மலானிக்கு தற்போது 94 வயது ஆகிறது. அவர், கடந்த வாரம் தீவிர வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.