மியான்மர் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து வரும் ரோஹிங்ய இன முஸ்லிம்களுக்கு சர்வதேச நாடுகள் உதவ முன்வரவேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.

Special Correspondent

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மியான்மரின் ராகினே மாகாணத்தில் சோதனை சாவடிகளை குறிவைத்து ரோஹிங்ய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியது முதல் அங்கு தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது.

இதன்பின் கிராமங்களில் உள்ள வீடுகளை ராணுவத்தினர் தீ வைத்து கொளுத்தினர். மேலும் தொடர்ந்து ராணுவத்தினர் எதிராக செயல்படுவதால் உயிருக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்ய முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுவரை சுமார் 40 சதவீத ரோஹிங்ய இன முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள ஐநா அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, ரோஹிங்யா பிரச்சனையை கையாளும்விதம் தொடர்பாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று இந்தியாவின் தஞ்சம் புகுந்துள்ள 40,000 ரோஹிங்ய இன முஸ்லிமகளை மியான்மர் திருப்பி அனுப்பும் வேலையில் இந்திய அரசு மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளவதாக ஐ நா மனித உரிமை ஆணையாளர் ஸிய்டு அல் ஹுசைன் கண்டித்துள்ளார்.

உணவு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் ரோஹிங்ய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சர்வதேச சமூகம் முன் வரவேண்டும் என ஐநா தற்போது வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஐநா செய்தி தொடர்பாளர் துஜாரிக், வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார பொருட்கள் யூனிசெப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.