டி.வி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ளார்.

Special Correspondent

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம். பெரும்பான்மை இல்லாததால் குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது தகுதி நீக்கம் நடவடிக்கை சரியானதல்ல என்கிறார் டி.டி.வி தினகரன்.

மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. நீதிமன்றத்தில்தான் இதற்கு விடைக் கிடைக்கும். நீதிமன்றத்தில் நிச்சயமாக ஜெயிப்போம் என்கிறார் நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன்.

ஆளுனர் மட்டும் மிகவும் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்த ஜனநாயகப் படுகொலை நடத்திருக்காது.பதவியில் தொடர்வதற்காக எந்த பாதகத்தையும் செய்யத் துணிந்து விட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆளுனரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி. இந்த ஜனநாயகப் படுகொலை கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி தெரிவித்த கருத்து " நீக்கம் செய்யப்பட்டவர்கள் கட்சி மாறவில்லை. அவர்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவரை மாற்ற வேண்டும் என்றுதான் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளது. அவையில் இருப்பவர்கள் வாக்களிக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மேல் ஒரு வாக்கு இருந்தால் கூட எடப்பாடி பழனிசாமி அரசு தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும். ஆனால் அது நிரந்தர தீர்வு அல்ல. அது மைனாரிட்டி அரசாக பார்க்கப்படும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று சொன்னால், தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் உள்பட 19 தொகுதிகளில் தேர்தலை நடத்த வேண்டும். அப்போது திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு அறுதிப்பெரும்பான்மையை நிரூபித்து திமுக ஆட்சி அமையும். இவ்வாறு கூறியுள்ளார்.