சில தினங்களுக்கு முன்பு, சேலம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இது பெரிய சர்ச்சையானதை அடுத்து, அப்பெண்ணிற்கு மாற்று ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது.

Special Correspondent

இந்த பிரச்னை அடங்குவதற்குள் திருப்பூரிலும் இதே போன்ற ஒரு குழப்பம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் ஊராட்சியை சேர்ந்த விவசாயி நல்லசிவம் (47). இவர் குடியிருக்கும் பகுதிக்கான ரேஷன் கடை சுங்காரமடக்கில் உள்ளது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு வந்துள்ளதை கேள்விப்பட்ட நல்லசிவத்தின் மனைவி சுமதி, சுங்காரமடக்கு ரேஷன் கடைக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டை வாங்க சென்றார்.

கூட்டம் அலைமோதியதால் ஸ்மார்ட் ரேஷன் கார்டை சரிபார்க்காமல் வாங்கி வந்துள்ளார் சுமதி. பின்னர் வீட்டிற்கு வந்து, ஸ்மார்ட் ரேஷன் கார்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதில் குடும்ப தலைவர் புகைப்படம் அச்சிடப்படவேண்டிய இடத்தில் விநாயகர் இருந்தது.

ஆனால் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் சரியாக இருந்தன. அந்த ரேஷன் கடைக்கு சென்று விவரம் கேட்டார். ரேஷன் கடை ஊழியர் இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் இ-சேவை மையத்திற்கு சென்று படத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

இதேபோல் தர்மபுரி மாவட்டம் போசிநாயக்கன அள்ளி பகுதியில் மகேஷ் சின்னசாமி என்பவரது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் புகைப்படம் இருக்க வேண்டிய பகுதியில் செருப்பு அணிந்த கால் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

தர்மபுரி மாவட்டத்தில் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டில் தொடரும் குளறுபடிகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.