அதிமுக பிளவுபட்டு அதிமுகவில் தினகரன் கோஷ்டி ஆட்சியை கலைக்க கங்கணம் கட்டி வரும் வேளையில் திமுக எம் எல் ஏக்கள் கூட்டம் முடிந்த வேளையில்..

Special Correspondent

அரசு விழாக்களை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும் தலைமைச்செயலாளர்-காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் கண்டனம். மற்றும்

ஆளுநர் - முதல்வர் - சபாநாயகரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம்

ஆகிய இரு தீர்மானங்களை ஏற்றி விட்டு எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுகவின் செயல் தலைவர் M. K. Stalin அளித்த பேட்டி விவரம் :

செய்தியாளர்: இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

ஸ்டாலின்: இப்போதைய நிலையில் டெல்லியில் இருந்து இயக்குவதற்கு ஏற்ப கவர்னர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதான் புலப்படுகிறது.

செய்தியாளர்: சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடுமா?

ஸ்டாலின்: அது உங்களுடைய ஆசை. நீதிமன்றத்தில் நாளை என்ன முடிவு வருகிறது என்பது தெரிந்த பிறகு எங்களுடைய நடவடிக்கை இருக்கும்.

செய்தியாளர்: நீங்கள் எடுக்கும் முடிவுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுப்படுவதாக தீர்மானத்தில் தெரிவித்து இருக்கிறீர்களே?

ஸ்டாலின்: நான் எடுக்கும் முடிவுக்கு அல்ல, அவர்களுடன் கலந்து பேசி எடுத்துள்ள முடிவை நான் ஏற்று அறிவிப்பேன்.

செய்தியாளர்: டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்களே?

ஸ்டாலின்: அவர்களும் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்வதால், நாங்கள் அதை சொல்லக் கூடாதா?

செய்தியாளர்: வெளியூரில் தங்கியுள்ள 18 எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஸ்டாலின்: ஏற்கனவே, இந்த ‘குதிரை பேர’ ஆட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசுக்கு எதிராக வாக்களித்து, செயல்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல், இப்போது 18 பேர் மீது மட்டும் அரசியல் சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

செய்தியாளர்: ஒருவேளை தேர்தல் உடனே நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?

ஸ்டாலின்: எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த மக்களும் தயாராக இருக்கிறார்கள்.

செய்தியாளர்: ஆளுநர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்திரவிடா விட்டால் திமுக கூண்டோடு ராஜினாமா செய்யுமா?

ஸ்டாலின்: உங்களுடைய பெருந்தன்மையான ஆலோசனைக்கு நன்றி.

மத்தியில் பிஜேபி அரசு திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்கள் என்ற பொய்யை பரப்பி இதன் மூலம் ராஜினாமா செய்யும் நிலை வந்தால் இருக்கும் 108 எம்எல்ஏக்கள் வைத்து கொண்டு ஆட்சி ஜாலியாக நடத்தி விடலாம் என்ற பிஜேபி மற்றும் எடப்பாடி ஓபிஎஸ் கனவை நக்கல் செய்தது போல இருந்தது "உங்களுடைய பெருந்தன்மையான ஆலோசனைக்கு நன்றி" என்கிற ஸ்டாலின் பதில் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.