திமுக சட்டசபையில் குட்கா கொண்டு சென்று சட்ட விரோதமான பொருள் சென்னை எங்கும் சுலபமாக கிடக்கிறது என்று கூறிய போது அதனை சட்ட பிரச்சனை என்றாக்கிய சபாநாயகர் முடிவை நீதிமன்றம் எடுத்து சென்று தடை வாங்கிய நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்த பகிர் விவரம் இதோ :

Special Correspondent

சென்னை பெருங்குடியில் ஒரே அறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சில நாட்களுக்கு முன் நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது.

சென்னையில் பாடி குமரன் நகரில் உள்ள ஒரு குடோனில் 70 மூட்டைகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா, புகையிலை, போன்ற போதைப்பொருள்கள் 25.09.2017 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் கண்டுகொள்ளாததன் விளைவாக இப்போது சென்னையில் அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. எங்கெல்லாம் டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்துள்ளனவோ, அவற்றுக்கு அருகில் ஏதோ ஒரு இடத்தில் கஞ்சா கிடைக்கிறது. அதிகபட்சமாக அரை கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு சட்டவிரோத கஞ்சா விற்பனையகம் நடைபெறுகிறது.

குறிப்பாக பள்ளி மாணவர்களை இலக்கு வைத்து பள்ளிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை பட்டாணி, சுண்டல்களுக்கு மட்டுமின்றி கஞ்சாவுக்கும் புகழ்பெற்ற இடமாக மாறிவருகிறது.

கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் மட்டுமின்றி எல்.எஸ்.டி (Lysergic Acid Diethylamide -LSD) எனப்படும் ஒரு வகை போதை மருந்தையும் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். ஒருவகையான காளானிலிருந்து தயாரிக்கப்படும் இந்த போதை மருந்து குறைந்த பட்சம் 12 மணி நேரம் மாயை உலகில் மனிதர்களை மிதக்க வைத்திருக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

கஞ்சா சென்னை முழுவதும் கிடைக்கும் நிலையில், மற்ற உயர்வகை போதை மருந்துகள் எழும்பூர், தரமணி, கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும், புறநகர் பகுதிகளில் மதுரவாயல், பூந்தமல்லி, வண்டலூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் போதை மருந்து விற்பனை தடையின்றி நடைபெற்று வருகிறது.

வாடிக்கையாளர்களின் அறைகளுக்கே போதை மருந்தை கொண்டு சென்று வழங்குவதும் நடக்கிறது. இந்த விவரங்கள் அனைத்தும் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை விட, காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும்.

ஆனாலும், குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் என்னென்ன பலன்கள் கிடைத்தனவோ, அதைவிட பலமடங்கு அதிக பலன்கள் கிடைப்பதால் அவர்கள் கண்டுகொள்ள மறுக்கின்றனர். இதனால் போதை வணிகம் கட்டுப்பாடின்றி வளர்ந்து கொண்டிருக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.