கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் "கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 126 இறால் குட்டைகள் இருப்பதாக அரசின் இணைய தளம் கூறுகிறது. இதில் 76 பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ளது. இந்த 76 இறால் குட்டைகளில் 50 குட்டைகள் தங்களது அனுமதி சான்றை (லைசன்ஸ்) இன்னும் புதுப்பிக்காமல் நடத்துகின்றனர்.

Special Correspondent

அரசின் அனுமதி பெற்றது 26 இறால் பண்ணைகள் என்றாலும், சட்டவிரோதமக 400 க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் எவ்வித தடையும் இல்லாமல் செயல்படுகிறது.

இறால் பண்ணைகள் ஊருக்கு மிக அருகாமையிலும், வயல்வெளிகளை நாசப்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் குடிநீர் மிகவும் தட்டுப்பாட்டில் உள்ளது. பல கிராமங்களில் ஒரே ஒரு அடிகுழாய் தண்ணீரை நம்பி 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கிறார்கள். இதனை கண்டித்து கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் இப்பகுதியில் உள்ள கிராம மக்களுடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

இத்தகைய தொடர் போராட்டங்களால் கடந்த ஜூலை மாதம் 37 இறால் பண்ணைகளில் உள்ள நீர் மோட்டார்களுக்கு சீல் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் வந்து அடுத்த சில தினங்களில் அந்த சீல் உடைக்கப்பட்டு மீண்டும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.

குறிப்பாக கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் இறால் பண்ணைகளின் ஏஜெண்டுகளாக செயல்படுகின்றனர். இவர்கள் கொடுக்கும் ஆதரவில் அனுமதி இல்லாத இறால் பண்ணைகள் செழிப்பாக வளர்ந்துவருகின்றனர்.

உதாரனமாக கிள்ளை பேரூராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் எம்.ஆர்.வி நிறுவனம் ஒரே ஒரு இறால் குட்டைக்கு அனுமதி பெற்று 10 குட்டைகளை நடத்துகின்றனர். இந்த ஊரில் குடிநீர் இல்லாமல் இக்கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிள்ளையில் குடிநீர் பிடிக்க தினமும் வேதனையோடு நடந்துவருகின்றனர்" என்றார்.

இந்நிலையில் பல கட்ட போராட்டங்களை நடத்திய அப்பகுதி மக்கள் வியாழன் காலை 6 மணிக்கு குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் குச்சிபாளையம் கிராமத்தில் இருந்து இறால் குட்டைகள் அமைந்துள்ள பகுதிக்கு இறால்குட்டைகளை தடை செய் என்ற பாதகைகளை ஏந்திகொண்டு பேரணியாக சென்றனர்.

அப்போது காவல் துறையினர் பொதுமக்களை அனுமதியில்லை என்று தடுத்து நிறுத்தினர்.

அப்போது "குடிக்க நல்ல தண்ணீர் கொடுக்க வக்கு இல்லை. எங்களை தடுத்து நிறுத்துகிறீர்களே" என்று காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினரின் தடுப்பை மீறி அனைவரும் அதே கிராமத்தில் எம்ஆர்வி என்ற நிறுவனம் நடத்தும் இறால் குட்டையில் அமர்ந்து சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள்.