ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) நடைபெற்றது. தற்போதைய தேர்தலில், அதிபர் விளாதிமீர் புதின் உட்பட எட்டுபேர் களத்தில் இருந்தனர்.

Special Correspondent

புதினுக்கு கடுமையான நெருக்கடியைக் தருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸி நாவல்னி சட்ட பிரச்னை காரணமாக இத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதையடுத்து, பலத்த எதிர்ப்பு எதுவும் இன்றி இத்தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், 70 சதவீத பெரும்பான்மை ஆதரவுடன் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டிருந்தன.

முன்னாள் உளவுத் துறை அதிகாரியான புதின் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவரின் இரண்டாவது முறை பதவிக் காலம் 2008-இல் நிறைவடைந்தது.

இதையடுத்து, அந்தப் பொறுப்பை தனது நம்பிக்கைக்குரிய திமித்ரி மெத்வதேவிடம் வழங்கினார். பின்னர் அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்தார்.

இருப்பினும், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதையடுத்து, 2012-இல் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார். அது முதல் தற்போது வரையில் அவர்தான் அதிபர் பதவியில் தொடர்கிறார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக புதின் பொறுப்பேற்று, 2024-ஆம் ஆண்டு வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார்.

இதன் மூலம் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் அதிபர் பதவியில் இருந்தவர் என்ற சாதனையை புதின் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டதையடுத்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் உளவாளி செர்கே தாக்கப்பட்ட செய்தியை ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார். இதில் ரஷ்யா ஈடுபட்டிருந்தால் ரசாயன தாக்குதலுக்கு ஆள்பட்ட சில நிமிடங்களிலேயே செர்கே உயிரிழந்திருப்பார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

விசாரணைக்காக பிரிட்டனுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் புதின் கூறியிருக்கிறார். பிரிட்டனில் இருந்த ரஷ்ய முன்னாள் உளவாளி செர்கே கிருபால் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதில் செர்கே மற்றும் அவரது மகள் இருவரும் பாதிக்கப்பட்டு ல்ண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ரஷ்யா மீது குற்றம்சாட்டிய பிரிட்டன் லண்டனில் இருந்த ரஷ்ய தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேறுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. .