அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் அந்த கவரை தூக்கி முன்னால் போட்டார்கள். அதிர்ந்து விட்டேன். பத்து கோடி ரூபாய் கேட்டு வந்த மானநஷ்ட வழக்கு குறித்த வழக்கறிஞர் நோட்டீஸ் அது. புலம்பித் தள்ளி விட்டேன் பக்கத்தில் இருந்த அண்ணனிடம். “அண்ணே சத்தியமா சொல்றேன் என் அக்கவுண்டில் நூறு ரூபாய்தான் இருக்குது. பன்னெண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவனால எப்படின்னே பத்து கோடி ரூபா கட்ட முடியும்” என்றெல்லாம் பயந்து நடுங்கி விட்டேன்.

அப்போதுதான் வேலையில் நூல் பிடித்து ஏறி வரும் ஒரு இளம் பத்திரிகையாளன் பயப்படக்கூடாதுதான். “தம்பி மானநஷ்ட வழக்குப் போடணும்னா குறிப்பிட்ட ப்ரசெண்ட் கோர்ட் பீஸா கட்டணும். எந்த அரசியல்வாதியும் அதைச் செய்ய மாட்டாங்க பயப்படாத” என்று எல்லோரும் தேற்றினார்கள்.

விஷயம் வேறொன்றுமில்லை, சிவகாசி ஜெயலட்சுமி தெரியும்தானே? ஏட்டு முதல் எஸ்பி வரை என எல்லோரும் அப்போது விரட்டி விரட்டி எழுதினார்களே? ஜெயலட்சுமிக்கு அப்போது என்னுடைய நண்பர் அழகர்சாமி வழக்கறிஞராக இருந்தார். அவர் வழியாக ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்து ஜெயலட்சுமி அப்போது வாழ்ந்து கொண்டிருந்த மதுரைக்குப் போனேன். அவர் பலதும் பேசினார். அதுவரை அவர் ஏட்டுகளையும் எஸ்பிக்களையும் மட்டுமே மற்ற பத்திரிகைகளில் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தார். “தம்பி இதுவரை யார்ட்டயும் சொல்லாத ஒரு விஷயத்தை உண்ட்ட சொல்லப் போறேன்” என்று பீடிகை போட்டதும் நிமிர்ந்து அமர்ந்தேன்.

Special Correspondent

உண்மையில் அவர் சொன்னதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. அப்போது அந்தக் குற்றச்சாட்டைச் சொன்னார். “கோட்டையில அவருக்கு டி.எஸ்.பி ஒருத்தரோட போய் பணம் கொடுத்தேன். விஐபி சூட்கேஸில் வைத்துக் கொடுத்தேன்” என்றார். உடனடியாக அலுவலகத்திற்கு அழைத்துச் சொன்னேன். அந்த வார கவர் ஸ்டோரி அதுதான் என்று எல்லோரும் தயாராக இருந்தார்கள். அந்த டேப்பை பத்திரமாக கொண்டு வரச் சொன்னார்கள். தெருமுனைக்கு வந்து பார்த்தால் ஜெயலட்சுமி சொன்னது எதுவும் பதிவாகவில்லை. பயந்து நடுங்கி விட்டேன்.

திரும்பப் போய் சோகமாக அவருடைய வாசலில் போய் நின்றேன். “என்ன தம்பி” என்றார். “அக்கா நீங்க சொன்னது எதுவும் பதிவாகலைக்கா” என்றதும், “தம்பி இதுக்கு எதுக்கு இப்படி சோகமா இருக்க. வாழ்க்கைன்னா பலதும் இப்பிடி வரத்தான் செய்யும். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்பிடி பயந்துக்க கூடாது. வா இன்னொரு தடவை பேசித்தர்றேன்” என்று சொல்லி விட்டு அச்சரம் பிசகாமல் அப்படியே அவர் பேசியதிலேயே தெரிந்தது. அவர் சொல்வதில் பகுதி உண்மை இருக்கிறது. என்னுடன் வந்த புகைப்படக்காரர் செந்தில்குமரன் அந்தக்கா லக்ஸ் சோப் பாக்கெட்டை கையில் உருட்டிக் கொண்டிருந்த போது எடுத்த படம்தான் கவர் படமாகவும் வந்தது.

Special Correspondent

அந்த கவர் ஸ்டோரி வந்த பிறகுதான் இந்த மானநஷ்ட வழக்கு நோட்டீஸ். அதுவரை ஏட்டு சப் இன்ஸ், இன்ஸ்பெக்ட், டி.எஸ்.பி, எஸ்.பி என கட்டம் கட்டிக் கொண்டிருந்த மற்ற பத்திரிகைகள், அந்த அரசியல்வாதியை நோக்கி யுடர்ன் அடித்துத் திரும்பினார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட அந்த டேப்பில் என்ன இருக்கிறது என தொலைபேசி செய்து விசாரித்தார்கள்.

கார்டனில் இருந்து அம்மா கூப்பிடச் சொன்னாங்க என இப்போது அவருக்கு வலதுபுறமாக நின்று பேட்டி கொடுக்கும் முன்னாள் நிதியமைச்சர் அழைத்து விவரம் கேட்டார். “சார் அந்தம்மா சொன்னது டேப்பில பதிவாகியிருக்கு. அது ஆதாரமா எங்கட்ட இருக்கு” என்றேன். “அதில்லை தம்பி அதுல உண்மை இருக்கான்னு கேட்கறோம்” என்றார்.

“அது தெரியாதுங்க சார். ஆனா அவங்க இத இரண்டு தடவை சொன்னாங்க. சொல்றப்ப அவங்க கொஞ்சம்கூட தடுமாறல. நூல் பிடிச்சாப்பில அந்த சம்பவத்த திரும்பி சொன்னாங்க” என்றேன். எதிர்முனை சற்று நேரம் அமைதியாக இருந்தது. சத்தம் காட்டாமல் அந்த மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது. அதுசரி யார் அந்த அரசியல்வாதி? வேறு யார்? எங்களை மாதிரியான நல்ல அரசியல்வாதிகளைப் போல மாணவர்களை வளர்க்க வேண்டும் ” என்று சொன்னவரேதான்...

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு