இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே ஒரு முகத்தையும் பெயரையும் பிராண்டாக மாற்ற செய்யப்பட்ட பெரும் முதலீடு மோடி மீது செய்யப்பட்ட முதலீடுதான்.

அந்த முதலீட்டின் பங்குதாரர்களுக்கு அது பெரும் லாபமளிக்கும் செலவாகவும் உத்திரவாதமான முதலீடாகவும் இல்லாதிருந்தால் இந்த ரிஸ்கை அவர்கள் எடுத்திருக்கப்போவதில்லை. மோடி ஒரு தேவதூதனாக அறிமுகம் செய்யப்பட்டு அது குறித்த விளம்பர முற்றுகையில் நாம் சிக்கி 5 ஆண்டுகள் ஆகிறது. மோடி ஒரு பேரபாயம் என அவரை எதிர்த்தவர்கள் தீவிரமாக எச்சரிக்க ஆரம்பித்தும் 5 ஆண்டுகள் ஆகிறது.

ஹீரோயிசம், பன்ச் வசனம், துரோகம், ரத்தம், ஐட்டம் டான்ஸ், பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் என ஒரு மசாலாப் படத்தின் எல்லா அம்சங்களும் கொண்ட மோடி பிராஜெக்ட் பெரு வெற்றி பெற்று மூன்றாண்டுகள் முடிந்தாயிற்று. அதிகாரபூர்வ மனைவியோடு தேனிலவு செல்லும் முன்பே ஊரைவிட்டு ஓடிய மோடிக்கு, காலம் யாருக்கும் கிடைக்காத அளவுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகால அரசியல் ஹனிமூன் வாய்ப்பை வழங்கிற்று.

Special Correspondent

சூப்பர்மேன் என்றாலும் மோடிக்கும் சில பலவீனங்கள் இருக்கும் இல்லையா? அதில் பிரதானமானது அவருக்கு தன்னைத்தவிர வேறு எதன் மீதும் அக்கறை கிடையாது என்பது. அந்த வெறித்தனமான தன்முனைப்புக்கு யாராலும் நீண்டகாலம் முட்டுக்கொடுக்க முடியாது. குஜராத்தில் எப்படி 12 வருடகாலம் முதல்வராக இருந்தார் என கேட்கலாம்.

அது குஜராத்தின் கள நிலவரம் காரணமாகவோ அல்லது எதேச்சையாகவோ நிகழ்ந்திருக்கலாம். அந்த சாதகம் இந்திய அளவில் அவருக்கு இல்லை. ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு கச்சா எண்ணை விலை சரிவு எனும் சாதகம் இருந்தது, அதனைக் காட்டி தான் ஒரு அதிருஷ்ட்டக்காரன்தான் என்றும் பெருமையடித்துக்கொண்டார்.

அவையெல்லாம் முடிவுக்கு வருவது இப்போது தெரிகிறது. வேலைவாய்ப்பு அதலபாதாளத்தை நோக்கி விரைகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு சந்தையை நோக்கி புதிதாக வருகிறார்கள், அதில் 500 பேருக்கு மட்டுமே புதிய வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உற்பத்தித்துறை இன்னும் 30% வேலைவாய்ப்பு இழப்பை சந்திக்கும் என எச்சாரிக்கைகள் வந்துவிட்டன.

ஜிடிபி வானளவு உயர்வதாக காட்டப்பட்ட பித்தலாட்டங்கள் தமது பளபளப்பை இழந்துவிட்டது. ஃபோர்ஜரி செய்துகூட இனி ஜிடிபியை உயர்த்த முடியாது எனும் நிலையில் பாஜக இருக்கிறது. பொருளாதார சுணக்கம் ஒரு தொழில்நுட்ப பிரச்சினை என அமித்ஷா சொல்கிறார். ஆனால் அருண் ஜெட்லியோ பொருளாதார இழப்புக்கு என்ன செய்வது என ஆலோசனை நடத்தி அரசு கூடுதலாக 50000 கோடி செலவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயற்சி செய்யப்போகிறோம் என்கிறார். இனி எந்த நம்பரை வைத்தும் மக்களை ஏமாற்ற முடியாது எனும் அளவுக்கு பொருளாதாரப் பின்னடைவு எல்லா மட்டங்களிலும் அம்பலமாகிவிட்டது. அதை மறைக்க இயலாமல் அரசு கையைப்பிசைகிறது.

Special Correspondent

மோடி படோடாபமாக அடிக்கல் நாட்டிய புல்லட் ரயிலும் திறந்துவைத்த நர்மதா அணையும் கவனிப்பாரற்ற செய்திகளாக கடக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இது நிகழ்ந்திருந்தால் அதுகுறித்த செய்திச் சுனாமியில் நாம் மூழ்கிப்போயிருப்போம். இப்போதோ புல்லட் ரயில் பற்றி குஜராத்திகளே நக்கலடிக்கிறார்கள். சமூக வலைதள பிரச்சாரத்துக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை இறைத்த, சமூக ஊடக பொய்களை உற்பத்தி செய்ய தனி தொழிற்சாலைகளை நடத்திய பாஜகவின் தலைவர் அமித்ஷா “சமூக ஊடக செய்திகளை நம்பாதீர்கள்” என கதறும் நிலைக்கு வந்திருக்கிறார்.

சமீபகாலமாக வரும் மத்திய அரசு விளம்பரங்களில் மோடி வாயை பிளக்கும் காட்சிகள் வருவதில்லை. அதனை நிதின் கட்கரி போன்ற துணை நடிகர்கள் அலங்கரிக்கின்றார்கள். மோடி மூஞ்சை வைத்தெல்லாம் 2019ல் யாவாரம் செய்ய முடியாது என ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக அறிவிக்கிறது. கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு சர்வதேச நெருக்கடிகள் அதிகரிக்கும் சூழல் வந்தது. உடனே மோகன் பாகவத் 50 நாடுகளின் தூதர்களுக்கு காலை விருந்து வைத்து நாங்கள் பாஜகவை இயக்கவில்லை... பாஜகவும் எங்களை இயக்கவில்லை என வாக்குமூலம் கொடுக்கிறார்.

இன்னொரு போக்கையும் நீங்கள் கவனிக்க இயலும். இந்தியாவுக்கான அமைச்சர்களையும் பிரதமரையும் நாமினேட் செய்யும் அமெரிக்கா இப்போது ராகுல் காந்தியை அழைத்து சீராட்டுகிறது. 2019ல் பிரதமர் வேட்பாளாராக நிற்கத் தயார் எனும் அறிவிப்பை முதலாத்துவத்தின் கருவறையான அமெரிக்காவில் போய் வெளியிடுகிறார் ராகுல்.

மேலும் அங்கே பல முக்கியமான தலைகளை தொடர்ந்து சந்திக்கிறார் அவர். வரலாற்றில் முதல் முறையாக ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேர்மறையான செய்திகள் எல்லா ஊடகங்களிலும் வருகின்றன. இதுவரை அவரை முதிர்ச்சியற்றவர் என விளித்த, அவர் பற்றிய எதிர்மறை செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்களின் இப்போக்கு கவனிக்கத்தக்கது.

வாரிசு அரசியலால் ஒன்றும் தோஷமில்லை, ஆர்.எஸ்.எஸ்-ல் கூட வாரிசு அரசியல் இருக்கிறது என ராகுலுக்கு மறைமுகமாக வரவேற்பளிக்கும் நடுப்பக்க கட்டுரையை எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டிருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து குழுமமும் ராகுல் மீதான கரிசனத்தை காட்ட ஆரம்பித்திருக்கின்றன. யுவராஜாவின் வருகையை நமக்கு அறிவிப்பது மட்டுமல்ல இந்த மாற்றத்தின் நோக்கம். மாறாக தேவை தீர்ந்த தொத்தல் மாடு நீ என கிழட்டு ராஜாவுக்கு உணர்த்தும் சமிஞைகள் இவை.

மோடிக்கு படியளந்தவர்களும் விலகும் சூழல் மெல்ல கனிகிறது. ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய கம்பெனிகளை நேரடியாக பாதிக்கின்ற முகேஷ் அம்பானிக்கு பெரும் லாபமளிக்கின்ற முடிவை டிராய் எடுத்திருக்கிறது. இரண்டு நிறுவனங்களுக்கு இடையே பரிமாறப்படும் அழைப்புக் கட்டணத்தை 14 பைசாவில் இருந்து 6 பைசாவாக குறைத்திருக்கிறது டிராய். பணமதிப்பிழப்பு மூலம் அமைப்புசாரா தொழில்களை சந்திக்கு கொண்டுவந்த மோடி ஜி.எஸ்.டி மூலம் முறைப்படுத்தப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்களை முடக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையிலும் பாஜகவை ஆதரித்த பல முதலாளிகளை எதிர்திசைக்கு விரட்டியிருக்கிறார்.

கடவுளின் தூதனாக அறிமுகமாவோர் பிறகு தாமே கடவுள் எனும் நிலைக்கு நகர்வதுதான் வழக்கம். மோடியும் தன்னை கடவுளாக கருதிக்கொண்டிருக்ககூடும். ஆனால் அதற்கு அவர் ராம் ரஹீம் சிங் போல ஒரு சிறிய பரப்பில் ஆசிரமம் துவங்கியிருந்திருக்க வேண்டும். இந்தியா என்பது முதலாளித்துவத்துக்கும் இந்து அடிப்படைவாதத்துக்கும் இருக்கும் பெரிய வேட்டைக்காடு. இதனை ஒற்றை மனிதனின் விளம்பர அரிப்புக்காக கார்ப்பரேட்டுக்களும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒரேயடியாக விட்டுக்கொடுக்க துணியமாட்டார்கள். மோடி புறங்கையை நக்கும்வரை பிரச்சினை இல்லை. முதலுக்கே மோசம் வரும் என்றால் அவர் அப்புறப்படுத்தப்படுவார்.

ஆர்.எஸ்.எஸ்-ம் அதனை ஆதரிக்கும் என்றே கணிக்க வேண்டியிருக்கிறது. காரணம் மோடியின் இடத்தை நிரப்ப பல வழிகள் இருக்கிறது (காங்கிரசை வைத்துகூட அதனால் சாதிக்க இயலும்).

ஆனால் மோடி மீது இதுவரை முதலீடு அவரை அவ்வளவு சுலபமாக கிளம்ப விடாது. அந்த மூலதனம் அவர் தன்னை கடவுள் என நம்பவைத்திருக்கிறது. அவரை நம்பும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும் உருவாக்கிவிட்டிருக்கிறது. மோடியின் வீழ்ச்சியின் மூலம் அவர்கள் தாங்கள் அம்மணமாக்கப்பட்டதாக உணர்வார்கள். அப்படி நடந்தால் மோடியும் அவர் பக்தர்களும் கணிக்க இயலாத கோமாளித்தனங்களையும் கொடூரங்களையும் செய்யக்கூடும். முடியிழந்த ராஜாக்கள் அடிபட்ட நாயைப்போன்றவர்கள். ஒன்று அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடக்கூடும் அல்லது கிடைப்பவன் மீது பாய்ந்து பிராண்டக்கூடும்...

உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம்... நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு